எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த முதல்வரின் மனைவி
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த முதல்வரின் மனைவி
ADDED : ஜூன் 14, 2024 04:06 AM

கேங்டாக் : சிக்கிம் மாநில முதல்வர் பிரேம்சிங் தமங்கின் மனைவி, பதவியேற்ற மறுநாளே நேற்று தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்த சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா மீண்டும் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக அக்கட்சியை சேர்ந்த பிரேம் சிங் தமங் மறுபடியும் பதவியேற்றார்.
இவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய், தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி வேட்பாளர் பீமல் ராயை வீழ்த்தி, நாம்சி சிங்கிதாங்க் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வானார்.
நேற்று முன்தினம் கிருஷ்ண குமாரி ராய், எம்.எல்.ஏ.,வாகவும் பதவியேற்றார். இந்நிலையில், நேற்று திடீரென தன் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஏன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் என்ற விவரம் தெரியவில்லை.
அவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஷெர்பா ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பதவி விலகல் குறித்து கேட்க கிருஷ்ண குமாரி ராயையோ, அவர் சார்ந்த கட்சி நிர்வாகிகளையோ தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.
முதல்வர் தமங், அருணாச்சலில் நேற்று நடைபெற்ற முதல்வர் பெமா காண்டு காண்டு பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள நிலையில், அவரது மனைவியின் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.