ADDED : செப் 03, 2026 07:32 PM
இனக்கலவரத்தில் 306 பேர் பலி!
இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கூகி – மெய்டி இனத்தவர்கள் இடையே, 2023ல் ஏற்பட்ட மோதல் இனக்கலவரமாக மாறியது. பல மாதங்களாக வன்முறை நீடித்ததை அடுத்து, முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ., அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி 9ல் பதவி விலகியது. அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 4ல் பா.ஜ.,வை சேர்ந்த கேம்சந்த் சிங் தலைமையில் புதிய முதல்வர் பதவியேற்றார். இதையடுத்து நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் இனக்கலவரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பா.ஜ.,வை சேர்ந்த மாநில உள்துறை அமைச்சர் கோவிந்தாஸ் கவுந்தஜம், ‘‘மாநிலத்தில், 2023, மே 3ல் துவங்கி கடந்த மாதம் 31 வரையில் இனக்கலவரத்தில் 306 பேர் பலியாகினர்; 49 பேர் மாயமாகி உள்ளனர்,’’ என, தெரிவித்தார்.
தெலுங்கானா அமைச்சர் நீக்கம்!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு வனத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கோண்டா சுரேகா. இவரது மகள் கோண்டா சுஷ்மிதா, முதல்வர் ரேவந்த் ரெட்டி, அரசுக்கு சொந்தமான முக்கிய நிலத்தை தன் சகோதரரின் போலி நிறுவனத்துக்கு குறைந்த விலைக்கு விற்றதாக குற்றஞ்சாட்டினார். தன் மகள் கூறிய கருத்துக்கு தான் பொறுப்பேற்க முடியாது என அமைச்சர் சுரேகா கூறினார். இதையடுத்த வனத்துறை அமைச்சர் பதவியில் இருந்து சுரேகாவை நீக்கி முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மிரட்டி பணம் பறிக்கும் முதல்வர்?
புதுடில்லி: பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு பகவந்த் மான் மற்றும் அவரது மனைவி ஊழலில் ஈடுபடுவதாக பா.ஜ., மற்றும் ஷிரோமணி அகாலிதளம் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி நேற்று அளித்த பேட்டியில், `‘‘பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் அவரது மனைவி குர்பிரித் கவுர் ஆகியோர் இடைத்தரகர்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஊழல் நெட்வொர்க்கை நடத்தி வருகின்றனர். பலாத்காரம் போன்ற கடும் குற்ற வழக்குகளின் விசாரணைகளை ரத்து செய்ய முதல்வர் மனைவி 5 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன,’’ என கூறி ஆடியோ பதிவு மற்றும் ஆவணங்களை வெளியிட்டார்.
