ADDED : டிச 23, 2024 04:43 AM

குருகிராம்: நம் நாட்டில் இருந்து, 'சிம் கார்டு'களை வாங்கி, மலேஷியாவில், 'சைபர்' மோசடி பேர்வழிகளுக்கு விற்பனை செய்த தமிழத்தை சேர்ந்த நபர், திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தின் திருச்சி விமான நிலையத்தில், கடந்த 19ல் மலேஷியாவில் இருந்து வந்த பயணியரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, முகமது இக்பால் என்பவரின் பையில் இருந்து 150க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன், இந்திய மற்றும் வெளிநாட்டு கரன்சிகள், சர்வதேச டிரைவிங் லைசன்ஸ், மலேஷிய பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், இங்குள்ள சிம் கார்டுகளை முறைகேடாக வாங்கி, மலேஷியாவில் இருந்தபடி நம் நாட்டில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டோருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதவிர, ஹரியானா மாநிலத்தில் 2.81 கோடி ரூபாய் பங்குசந்தையில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில், இக்பால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்ட அவரை, ஹரியானா போலீசிடம் தமிழக அதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர்.

