பாடகர் ஜூபீன் கார்க் மரண வழக்கு:அசாம் தலைமை தகவல் ஆணையர் ராஜினாமா!
பாடகர் ஜூபீன் கார்க் மரண வழக்கு:அசாம் தலைமை தகவல் ஆணையர் ராஜினாமா!
ADDED : நவ 06, 2025 06:45 PM

குவஹாத்தி:பாடகர் ஜூபீன் கார்க்கின் மர்மமான மரணம் தொடர்பாக தன் சகோதரர் ஷியாம்கானு மஹந்தா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அசாம் தலைமை தகவல் ஆணையர் (சிஐசி) பாஸ்கர் ஜோதி மஹந்தா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரியான பாஸ்கர் ஜோதி மஹந்தா, மார்ச் 2023 இல் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பு 2019 முதல் 2023 வரை அசாம் டிஜிபியாக பணியாற்றினார். அவரது தலைமை தகவல் ஆணையர் பதவிக்காலம் மார்ச் 2026ல் முடிவடைய இருந்தது.
இந்த நிலையில், பிரபல பாடகரும் நடிகருமான ஜூபீன் கார்க் செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் இறந்த வழக்கில் தனது சகோதரர் ஷியாம்கானு மஹந்தா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாஸ்கர் ஜோதி மஹந்தா தனது தலைமை தகவல் ஆணையர்
பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் பாஸ்கர் ஜோதி மஹந்தா கூறியதாவது:
எனது சகோதரர் குறித்து ஏதேனும் தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டால், அது சந்தேகங்கள் அல்லது தவறான விளக்கங்களுக்கு வழிவகுக்கும் என்று எனது மனசாட்சி என்னிடம் கூறியது. சிறிதளவு சந்தேகத்தையும் தவிர்க்க, நான் விலகிச் செல்வது தான் சரியென்று உணர்ந்தேன்,
சிஐசி அலுவலகத்தின் கண்ணியத்தைப் பேணவும், நலன் மோதல் என்ற கருத்தைத் தவிர்க்கவும் தான் ராஜினாமா செய்தேன்.
இவ்வாறு பாஸ்கர் ஜோதி மஹந்தா கூறினார்.

