
'ஆதிபத்ரா' திரைப்படம் மூலமாக, சயான் ஷெட்டி இயக்குனராக, கன்னட திரையுலகில் நுழைந்துள்ளார். கதை குறித்து அவரிடம் கேட்ட போது, ஆதிபத்ரா என்றால் எச்சரிக்கை என, அர்த்தமாகும். டைட்டிலின் ஒவ்வொரு எழுத்துக்கும் குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது. 1980ல் நடக்கும் மர்மமான சம்பவத்தை சுற்றி, கதை நகர்கிறது. சஸ்பென்ஸ், திரில்லிங் கதையாகும். உண்மை சம்பவத்துடன், கற்பனையை கலந்து திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.
''இது என் முதல் படமாகும். எனக்கு விளம்பர படங்கள் எடுத்த அனுபவம் உள்ளது. இது படம் இயக்க பெரிதும் உதவியது. படத்தில் ரூபேஷ் ஷெட்டி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜான்ஹவி தேர்வு செய்யப்பட்டுள்ளார், என்றார்.
நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டியுடன், 'ஹரிகதே அல்ல கிரிகதே' திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த தபஸ்வினி பூனச்சா, இயல்பான நடிப்பால் மக்களை கவர்ந்தார். தற்போது 'கஜராமா' என்ற படத்தில் நடிக்கிறார்.
இது குறித்து, தபஸ்வினி பூனச்சா கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் நான் இந்த படத்தில் நடிக்கிறேன். முன்பே படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராமல் தாமதமானது. 'கஜராமா' திரைப்படத்தில், நான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளேன். தற்போது 'மிஸ்டர் ஜாக்' உட்பட, பல திரைப்படங்களில் நடித்து வருகிறேன். குஸ்தி விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். என் கதாபாத்திரத்தை இயக்குனர் அழகாக உருவாக்கியுள்ளார். எனக்கு கவர்ச்சி பொம்மையாக இருப்பதில் ஆர்வம் இல்லை. நடிப்பு திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதே, என் விருப்பமாகும், என்றார்.
'நீர்தோசே' படத்தை இயக்கிய விஜயபிரசாத் இயக்கத்தில் தயாரான 'சித்லிங்கு - 2' திரைப்படம், பிப்ரவரி 14ல் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் முதல் பாடல் வெளியிடப்பட்டது. படக்குழுவினர் கூறுகையில், 'தயாரிப்பாளர்கள் ஹரி மற்றும் ராஜு இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் யோகி, சோனு கவுடா நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். இதில் நடிகர் யோகியை புது கெட் அப்பில் பார்க்கலாம்.
'படம் முழுதும் இதே வேடத்தில்தான் இருப்பார். படத்தில் சுமன் ரங்கநாத், கிரிஜா லோகேஷ், அந்தோனி கமல் உட்பட, பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தை மாநிலம் முழுதும் திரையிட திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.
நடிகர் சுதீப் பல வெற்றி படங்களை கொடுத்தவர். லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளார். இவர் திரையுலகுக்கு வந்து 29 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இது குறித்து சுதீப் கூறுகையில், திரையுலகில் நான் 29 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நடிப்பின் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பது பெருமை அளிக்கிறது. ரசிகர்களின் அன்பை பெற்ற நான் பாக்கியசாலி. அனைவரின் ஆதரவு என் தொழில் பயணத்தை எளிதாக்கியது. நான் பட இயக்கத்தை நிறுத்தி, பல ஆண்டுகள் ஆகின்றன. படம் இயக்கும் ஆர்வம் இப்போதும் உள்ளது. கதைகள் கேட்கிறேன். விரைவில் இயக்குவேன், என்றார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தில் ரமேஷ் அரவிந்த், கணேஷ் இணைந்து நடக்கின்றனர். இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'இந்த படத்தை விக்யாத் இயக்கியுள்ளார். படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. சமீபத்தில் ஜானி மாஸ்டர் நடன வடிவமைப்பில், பெங்களூரில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்த படத்தில் பன்மொழி நடிகை மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்கிறார்.
'அவருக்கு கன்னட திரையுலகம் புதிதல்ல. புனித் ராஜ்குமார் நடித்த 'மவுர்யா', 'அரசு', சிவராஜ்குமாருடன் 'தேவரு கொட்ட தங்கி' உட்பட, சில படங்களில் மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். பல ஆண்டு இடைவெளிக்கு பின், அவர் கன்னடத்துக்கு வருகிறார். படத்தின் கதை முற்றிலும் மாறுபட்டது' என்றனர்.