அய்யா தெரியாம பண்ணிட்டேன் : மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செய்த அதிகாரி மன்னிப்பு கோரினார்
அய்யா தெரியாம பண்ணிட்டேன் : மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செய்த அதிகாரி மன்னிப்பு கோரினார்
ADDED : ஏப் 05, 2024 07:28 PM

புதுடில்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ., வென்றதாக தவறான அறிக்கை வெளியிட்டமைக்காக சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரினார் தேர்தல் அதிகாரி அனில் மாஷி
பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பொது தலைநகர் சண்டிகர். அதன் மாநகராட்சி மேயர் தேர்தல் நடந்தது. ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணியின் 8 ஓட்டுகள் செல்லாது என்று கூறி, பாரதிய ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நடந்த விசாரணையின்போது, தேர்தல் அதிகாரிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. கோர்ட் உத்தரவுப்படி, தேர்தல் அதிகாரி அனில் மாஷி ஆஜரானார். அப்போது, அவரிடம் நீதிபதிகள் பல கேள்விகளை கேட்டனர்
இந்நிலையில் கடந்த பிப்.,20ல் சண்டிகர் மேயர் தேர்தல் குளறுபடி தொடர்பான வீடியோ காட்சிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அனைவரும் முன்பாகவும் திரையிடப் பட்டது. வீடியோவில் பா. ஜ., வேட்பாளரை மேயராக தேர்வு செய்வதற்காக ஆம் ஆத்மிக்கு ஆதரவான 8 வாக்கு சீட்டுகளை வேண்டுமென்றே தேர்தல் அதிகாரி சிதைத்த வீடியோ வெளியானது.
இதன் பின்னர், நீதிபதிகள், தேர்தல் அதிகாரி அனில் மாஷி மிகப்பெரிய தவறு செய்து தனது அதிகார வரம்பை மீறியும், விதிமுறைகளை மீறியும் செயல்பட்டு உள்ளார் என முடிவு செய்து முந்தைய தேர்தல் முடிவுகளை சட்டவிரோதம் எனக்கூறி ரத்து செய்தனர்.
இதையடுத்து அனில் மாஷி அறிவித்த மேயர் தேர்தல் செல்லாது எனவும் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றியே செல்லும் என உத்தரவிட்டனர். தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி அனில் மாஷி மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் பா.ஜ.,வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்து தவறு செய்துவிட்டதாகவும் இதற்காக தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாண மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

