எஸ்.ஐ.ஆர்., எளிமையாக இருக்க வேண்டும்: பா.ஜ.,-எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
எஸ்.ஐ.ஆர்., எளிமையாக இருக்க வேண்டும்: பா.ஜ.,-எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ADDED : டிச 03, 2025 11:59 PM

புதுடில்லி: எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி எளிமையாகவும், வெளிப்படையாகவும் இருப்பதை உறுதி செய்யும்படி, மேற்கு வங்க பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
பீஹாரை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம், ம.பி., - உ.பி., உட்பட, 12 மாநிலங்களில், தேர்தல் கமிஷன் சார்பில் எஸ்.ஐ.ஆர்., பணி நடக்கிறது.
திசை திருப்பும் அரசியல்
இதில் தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் அசாமில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, முதல் வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று தொடர்ந்து, 15 ஆண்டுகளாக அரியணையில் உள்ளார்.
இந்த முறை அவரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜ., முனைப்புடன் உள்ளது. இந்நிலையில், தலைநகர் டில்லியில், மேற்கு வங்க பா.ஜ., - எம்.பி.,க்கள், அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சாந்தனு தாக்குர், சுகந்தா மஜும்தார் மற்றும் மாநில பா.ஜ., தலைவர் ஷாமிக் பட்டாச்சார்யா ஆகியோரை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்.
அவர்களிடம், பிரதமர் மோடி கூறியதாவது:
எஸ்.ஐ.ஆர்., பணி சிக்கலாக இருக்கக் கூடாது. அது எளிமையாகவும், வெளிப்படையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்படுவதும், தகுதியற்றவர்கள் நீக்கப்படுவதுமே இதன் நோக்கம். இந்த செய்தி, கடைக்கோடி தொண்டர் வரை சென்றடைய வேண்டும்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலை திறம்பட எதிர்கொள்ள, அனைத்து எம்.பி.,க்களும், நிர்வாகிகளும் நம்பிக்கையுடன் தயாராக வேண்டும். திரிணமுல் காங்கிரசின் திசை திருப்பும் அரசியல் வலையில் சிக்க வேண்டாம். அக்கட்சியின் ஊழல், நிர்வாகத் திறமையின்மையை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
மக்களை சந்தியுங்கள்
தேர்தல் முடியும் வரை, பா.ஜ., நிர்வாகிகள் அனைவரும் அவரவர் தொகுதியில் தங்கி, மக்களின் குறைகளை கேட்க வேண்டும். அவர்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அவ்வப்போது மக்களை சந்தித்து பேச வேண்டும். தேர்தல் வெற்றிக்கு, மக்களுடன் தொடர்பில் இருப்பதும், கள நிலவரங்களை புரிந்து கொள்வதும் அவசியம்.
மேற்கு வங்கத்தில், 2011-ல், பா.ஜ.,வுக்கு வெறும் மூன்று எம்.எல்.ஏ.,க்களே இருந்தனர். ஆனால் தற்போது, அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அங்கு, பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ., உள்ளது. அடுத்தாண்டு ஆளுங்கட்சியாக உருவெடுக்கும். இதற்கு ஒவ்வொரு பா.ஜ., தொண்டரும் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

