ADDED : ஏப் 02, 2026 06:07 PM
புதுடில்லி: 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஏப்ரலில் துவங்க உள்ள நிலையில், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.
நாடு முழுதும், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ள தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு ஜூனில் உத்தரவிட்டது.
இ தையடுத்து பீஹாரில் இந்த பணி நிறைவடைந்துள்ளது. மேலும் சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய ஒன்பது மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்., பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே அசாமில் எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பதில் சிறப்பு திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி கடந்த 10ல் நிறைவடைந்தது.
இந்நிலையில், மீதமுள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. இந்த பணி வரும் ஏப்ரலில் துவங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக ஆந்திரா, அருணாச்சல், சண்டிகர், தாத்ரா - நாகர்ஹவேலி, டையூ - டாமன், ஹரியானா, ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, லடாக், மஹாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, டில்லி, ஒடிஷா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகியவற்றின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி யுள்ளது.
