தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்க சதி; பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது!
தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்க சதி; பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது!
UPDATED : ஆக 23, 2025 09:41 PM
ADDED : ஆக 23, 2025 11:00 AM

பெங்களூரு: தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்கும் நோக்கத்துடன், பொய்ப்புகார் அளித்த முகமூடி அணிந்த ஆசாமியை தனிப்படை போலீசார், இன்று கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவில் பற்றி அவதுாறு பரப்பும் நோக்கத்துடன் ஒரு மாதத்துக்கும் மேலாக செய்திகள் பரப்பப்பட்டு வந்தன.
கோவிலில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் இத்தகைய புகார்களை யூடியூப் சேனல்களில் கூறி வந்தார். கோவில் அருகில் ஓடும் நேத்ராவதி ஆற்றங்கரையில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்கள் உடல்களை தாமே புதைத்ததாக, அவர் கூறினார். போலீசிலும் புகார் அளித்தார்.
முகமூடி அணிந்து கொண்டு அவர் அளித்த வீடியோ பேட்டி வெளியான நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாநில அரசு எஸ்.ஐ.டி., என்ற தனிப்படை விசாரணைக்கு உத்தரவிட்டது.
தொடர் விசாரணையில், அப்படி கொலை, கற்பழித்து எதுவும் நடந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள், அரசியல் கட்சியினர், மாநில அரசு என அனைத்து தரப்பினருமே, அப்படி கொலை, கற்பழிப்பு நடக்க வாய்ப்பில்லை; இது பொய்யான புகார் என்று அடித்துக்கூறினர்.
முகமூடி அணிந்த நபர், கோவில் புகழை கெடுக்கும் சதித்திட்டத்துடன் பொய்ப்புகார்களை கூறியுள்ளார் என்று பலரும் குற்றம் சாட்டினர். கடைசியில், அவரது பொய்கள் அம்பலமாகின. கிடுக்கிப்பிடி விசாரணையில், தமிழகத்தை சேர்ந்த ஒரு கும்பல் கூறியதன்பேரில், அவ்வாறு பொய்ப்புகார்களை கிளப்பியதாக, அந்த நபர் ஒப்புக்கொண்டார்.
இத்தகைய சூழ்நிலையில் இன்று (ஆகஸ்ட் 23), பொய்ப்புகார் அளித்து பரபரப்பை கிளப்பிய முகமூடி அணிந்த நபரை போலீசார் கைது செய்தனர். சின்னையா என்ற அந்த நபர் யாருடைய துாண்டுதலில் இவ்வாறு புகார் அளித்தார் என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கோவில் புகழை கெடுக்க சதித்திட்டம் தீட்டியவர்கள் விவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொய்ப்புகார் அளித்த சின்னையாவுக்கும் , தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்திலுக்கும் தொடர்பு இருப்பதாக, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புகார் கூறியிருந்தார். இதனால் கோவில் புகழை கெடுக்கும் சதி நோக்கத்துடன் இத்தகைய பொய்ப்புகார்களை அந்த நபர் கிளப்பியிருக்கலாம் என்றும் சந்தேகம் வலுத்துள்ளது.
சுஜாதா சொன்னதும் பொய்
இதே போல, தன்னுடைய மகள் அனன்யா பட் 2003ம் ஆண்டு தர்மஸ்தலா கோவிலில் காணாமல் போனதாக புகார் அளித்த சுஜாதா பட் என்பவரும் பொய்ப்புகார் அளித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. உண்மையில், தனக்கு அனன்யா பட் என்ற பெயரில் மகள் யாரும் இல்லை என்றும், தனது நிலத்தை எடுத்துக் கொண்ட கோவில் நிர்வாகத்தை பழிவாங்கவே அவ்வாறு பொய்ப்புகார் கூறியதாகவும் சுஜாதா பட் ஒப்புக்கொண்டார்.