முனிரத்னா மீது ஊழல் வழக்கு சபாநாயகருக்கு எஸ்.ஐ.டி., கடிதம்
முனிரத்னா மீது ஊழல் வழக்கு சபாநாயகருக்கு எஸ்.ஐ.டி., கடிதம்
ADDED : டிச 26, 2024 06:26 AM
பெங்களூரு: ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்டது தொடர்பாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டு, சபாநாயகர் காதருக்கு, எஸ்.ஐ.டி., - ஐ.ஜி., சந்திரசேகர் கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா. இவர், குப்பை அகற்றும் பணிகளை ஒப்பந்தம் கொடுக்க, ஒப்பந்ததாரர் செலுவராஜ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய், லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முனிரத்னாவும், செலுவராஜும் பேசியதாக கூறப்படும், ஆடியோ உரையாடல் வெளியானது.
அந்த ஆடியோவில் செலுவராஜ், அவரது மனைவியை, முனிரத்னா ஆபாசமாக பேசி உள்ளதாக பதிவுகள் இருந்தன. இதுகுறித்து செலுவராஜ் அளித்த புகாரில், முனிரத்னா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஜாமின் கிடைத்தது. இந்த வழக்கிற்கு பின், அவர் மீது பலாத்கார வழக்கும் பதிவானது. அதிலும் கைதாகி சிறையில் இருந்தார். இப்போது ஜாமினில் வெளியே உள்ளார்.
இரண்டு வழக்குகளையும் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் அரசு ஒப்படைத்தது.
இந்நிலையில் செலுவராஜிடம் லஞ்சம் கேட்டது தொடர்பாக, முனிரத்னா மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கும்படி, சபாநாயகர் காதருக்கு, எஸ்.ஐ.டி., - ஐ.ஜி., சந்திரசேகர் கடிதம் எழுதி உள்ளார். சபாநாயகர் அனுமதி கொடுத்தால், முனிரத்னாவுக்கு மேலும் சிக்கல் தான்.