குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது: நிதி அமைச்சர் நிர்மலா குற்றச்சாட்டு
குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது: நிதி அமைச்சர் நிர்மலா குற்றச்சாட்டு
ADDED : டிச 16, 2024 02:17 PM

புதுடில்லி: 'குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது. அடக்கு முறையில் ஈடுபட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை ஏந்தி தற்போது போராடுகின்றனர்' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டி உள்ளார்.
அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதத்தின் போது, ராஜ்யசபாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்திராவுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்த போது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது. காங்கிரஸ் குடும்பம் அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து திருத்திக் கொண்டே இருந்தது. பெண்களுக்கு எதிரான கொள்கை கொண்டது காங்கிரஸ்.
ஜனநாயகம்
பொருளாதார வளர்ச்சியை காங்கிரஸ் கொள்கை சீர்குலைத்தது. கருத்துச் சுதந்திரம் பற்றி இன்றும் பெருமை பேசும் ஜனநாயக நாடான இந்தியா, இந்தியர்களின் பேச்சுச் சுதந்திரத்தை முடக்கும் வகையிலும், அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஓராண்டுக்குள் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முதல் இடைக்கால அரசு கொண்டு வந்தது. ஜனநாயகம் குறித்து பெருமை கொள்கிறோம். அடக்கு முறையில் ஈடுபட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை ஏந்தி தற்போது போராடுகின்றனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.