வறுமையை நிரந்தரமாக ஒழிக்க நிலப்பங்கீடு ஒன்றே சரியான வழி சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேச்சு
வறுமையை நிரந்தரமாக ஒழிக்க நிலப்பங்கீடு ஒன்றே சரியான வழி சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேச்சு
ADDED : செப் 28, 2025 02:50 AM

புதுடில்லி:''வறுமையை நிரந்தரமாக ஒழிக்க, நிலப்பங்கீடு ஒன்றே சரியான வழியாகும்,'' என, டில்லியில் நடந்த 'பாப்சா' கருத்தரங்கில், சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசினார்.
டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலையில், 'பாப்சா' மாணவர்கள் இயக்கம் சார்பில், 'நிலமும் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், எழுத்தாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ப.சிவகாமி பங்கேற்று பேசியதாவது:
நிலம் மக்களின் வாழ்வாதாரம் என்ற அடிப்படையைத் தாண்டி, சொத்து, வியாபாரம் என்ற நிலையை எட்டியுள்ளது. இதனால் நிலமற்ற கூலி விவசாயிகள் பெருமளவில் இடம் பெயர்கின்றனர்.
தமிழகத்தில் மட்டும், 14.7 சதவீத விவசாய நிலங்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிரிடப் படாமல் களர் நிலங்களாக மாறி வருகின்றன.
நில உச்ச வரம்பை ஐந்து ஏக்கராகக் குறைத்து, உபரி நிலத்தை நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு, தலித் மற்றும் ஆதிவாசிகளுக்கு முன்னுரிமை தந்து, மறுபங்கீடு செய்ய வேண்டும். விவசாயம் சார்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, கூட்டு விவசாயத்திற்கு நிலம் ஒதுக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் 20 கிலோ மற்றும் எட்டு கிலோ அரிசியை, ரேஷன் அட்டை மூலம் பெறுவோரின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால், 26 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்.
வறுமையை நிரந்தரமாக ஒழிக்க, நிலப்பங்கீடு ஒன்றே சரியான வழியாகும். பஞ்சமி நிலத்தை மீட்டுத் தராமல், தமிழக அரசு போக்குக் காட்டி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.