சிவகுமார் சொத்து குவிப்பு வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
சிவகுமார் சொத்து குவிப்பு வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
ADDED : ஜன 06, 2024 07:10 AM

பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக காங்கிரஸ் கட்சியின் சிவகுமார் சொத்து குவித்த புகார் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அளித்த அனுமதியை மாநில அரசு திரும்பப் பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க கர்நாடகா உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.
கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதில் துணை முதல்வராக சிவகுமார் இருக்கிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க, முந்தைய பா.ஜ., அரசு, சி.பி.ஐ.,க்கு அனுமதி அளித்தது.
அவர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், சி.பி.ஐ., விசாரணை வழங்கப்பட்ட அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் 28ல் திரும்பப் பெற்றது.
மாநில அரசின் இந்த முடிவை எதிர்த்து பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் விசாரித்தார். நேற்று மனு மீது விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதேபோன்ற மனுவை நேற்று சி.பி.ஐ.,யும் தாக்கல் செய்தது. இரண்டு மனுக்களும் நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், “முந்தைய பா.ஜ., அரசு, சிவகுமார் மீதான புகார் குறித்து சி.பி.ஐ.,க்கு அனுமதி அளிக்க முறையான நடவடிக்கைகளை பின்பற்றவில்லை,” என்று கூறியதுடன், கோல்கட்டா உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் சில தீர்ப்புகளை முன்வைத்தார்.
சி.பி.ஐ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் சார்பில் ஆஜரான வக்கீல்கள், 'இந்த வழக்கின் விசாரணையை நிறைவு பெறும் நிலையில் உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கும் நேரத்தில், சி.பி.ஐ., விசாரணை நடத்த அனுமதியை திரும்ப பெற்றது சரியான நடவடிக்கை இல்லை' என்று வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்கைளையும் கேட்ட நீதிபதி, “விசாரணைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற முடியுமா?” என்று, அரசுக்கு கேள்வி எழுப்பினார். சி.பி.ஐ., தாக்கல் செய்த மேல்முறையீடு தொடர்பாக சிவகுமாருக்கும், மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
“மாநிலத்தில் இதுபோன்ற வழக்கு இதுவே முதன்முறை. வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு அனுப்பும்படி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன்,” என, நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் அறிவித்தார்.
உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., முறையீடு செய்திருப்பது குறித்து, துணை முதல்வர் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி:
நீதிமன்றம், கடவுள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என்னை துன்புறுத்த வேண்டும் என்பதற்காக, சி.பி.ஐ.,யிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. எங்கள் அரசு, முந்தைய அரசின் முடிவை ரத்து செய்து, எனது வழக்கை லோக் ஆயுக்தாவிடம் ஒப்படைத்து உள்ளது.
என் மீது சி.பி.ஐ., விசாரணைக்கு அளித்த அனுமதியை திரும்ப பெற்ற பிறகும், எனது குடும்பத்தினர், என்னுடன் வியாபாரம் செய்தவர்களுக்கு, சி.பி.ஐ., நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.
என்னை துன்புறுத்துவதற்கும் ஒரு எல்லை உண்டு. நான் எந்த தவறும் செய்யவில்லை. ராஜ்யசபா தேர்தலில் அஹமது படேல் வெற்றிக்காக, எங்கள் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாத்ததால், என்னை பழிவாங்குகின்றனர். பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவரின் வீட்டில் பணம் சிக்கியது. அது அவரது மகனுக்கு சொந்தமானது என்பதால், எம்.எல்.ஏ., மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
பா.ஜ.,வில் இருந்தால் தவறு செய்தவர்கள் கூட, புனிதர்கள் ஆகிவிடுகின்றனர். என்னை என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார்.
சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலுக்கு, நான் பணம் அனுப்பியதாக, முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறி உள்ளார். நான் பணம் அனுப்பியதை அவர் பார்த்தாரா? அவரிடம் ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.