கொரோனா மருத்துவ உபகரணங்களில் முறைகேடு தவறு செய்தோர் தப்ப மாட்டார்கள் என சிவகுமார் உறுதி
கொரோனா மருத்துவ உபகரணங்களில் முறைகேடு தவறு செய்தோர் தப்ப மாட்டார்கள் என சிவகுமார் உறுதி
ADDED : டிச 07, 2024 11:14 PM

பெங்களூரு: ''கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கமிட்டி பரிந்துரைத்தபடி, விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் தப்பமாட்டார்கள்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று, கொரோனா முறைகேடு தொடர்பாக நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சமர்ப்பித்த அறிக்கையின்படி, நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் பரமேஸ்வர், சரண்பிரகாஷ் பாட்டீல் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கொரோனா முறைகேடு
கூட்டத்துக்கு பின், துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
கொரோனா காலத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையில், முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். அரசு அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், சிலரின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது; எத்தனை வழக்குகள் பதிவாகும் என்று தெரியாது.
36 மரணம்
கடந்த பா.ஜ., ஆட்சியின் போது, சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில், 'ஆக்சிஜன்' பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணம் தொடர்பான அறிக்கையை எங்கள் அரசு ஏற்கவில்லை. எனவே, மீண்டும் விசாரணை நடத்தப்படும்.
நானும், முதல்வர் சித்தராமையாவும் மருத்துவமனைக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தோம். அப்போதைய அமைச்சர், மூன்று பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவித்தார். ஆனால், 36 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரித்தோம்.
இது தொடர்பாக நடந்த விசாரணை குறித்து, பெலகாவியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். இந்த விசாரணையில் அரசு தலையிடாது. எந்தவித நெருக்கடிக்கும் பணியாமல், அதிகாரிகள் சுதந்திரமாக விசாரணை நடத்துவர்.
84 லட்சம் பரிசோதனை
கொரோனாவின் போது, பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 84 லட்சம் பேருக்கு, 'ஆர்.டி.பி.சி.ஆர்.,' பரிசோதனை நடத்தப்பட்டது.
இதற்காக, 502 கோடி ரூபாய் செலவானதாகவும், 400 கோடி ரூபாய் பில் தொகை வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 84 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது என்றால், பெங்களூரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு பேருக்கு பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
கித்வாய் மருத்துவமனையில், 24 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், 124 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரே இடத்தில் 24 லட்சம் பேருக்கு பரிசோதனை என்றால், எவ்வளவு கூட்டம், வரிசை இருந்திருக்கும். இது தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்வோம்.
யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனவே தான், இந்த அறிக்கையை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற அதிகாரிகள் தலைமையில் கமிட்டி அமைக்கப்படும்.
குன்ஹா அறிக்கை தொடர்பாக எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவ்விசாரணை குறித்து பா.ஜ.,வின் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. இதில் வழக்கு பதிவு செய்வதை, அதிகாரிகள் முடிவு செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.
8_DMR_0002
கொரோனா முறைகேடு தொடர்பாக நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.