குமாரசாமி நற்பெயரை 'செல்லாக்காசாக்க' சிவகுமார் முயற்சி
குமாரசாமி நற்பெயரை 'செல்லாக்காசாக்க' சிவகுமார் முயற்சி
ADDED : ஜூலை 11, 2024 06:39 AM

பெங்களூரு நகரம், இன்று உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு ஐ.டி., - பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தான் காரணம்.
வெளி மாநிலங்களில் இருந்து பெங்களூருக்கு வேலைக்காக வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பெங்களூரில் நகரம் அசுர வளர்ச்சி அடைந்தாலும், பெங்களூரு அருகே உள்ள ராம்நகர், கோலார், சிக்கபல்லாபூர், துமகூரு மாவட்டங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை.
ராம்நகர் மாவட்டம்
தொட்டபல்லாப்பூர், எலஹங்கா, தேவனஹள்ளி, ஆனேக்கல், ஹொஸ்கோட், மாகடி, நெலமங்களா, பெங்களூரு தெற்கு, பெங்களூரு கிழக்கு, ராம்நகர், கனகபுரா, சென்ன பட்டணா ஆகிய நகரங்கள், 1986க்கு முன்பு வரை, பெங்களூரு நகருக்குள் இருந்தது.
ஆனால், 1986க்கு பின்பு தொட்டபல்லாப்பூர், தேவனஹள்ளி, ஹொஸ்கோட், ஆனேக்கல், மாகடி, நெலமங்களா, ராம்நகர், கனகபுரா, சென்ன பட்டணா ஆகிய நகரங்கள் பிரிக்கப்பட்டு, பெங்களூரு ரூரல் மாவட்டம் உருவானது.
கடந்த 2007ல் குமாரசாமி முதல்வராக இருந்தபோது, பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் இருந்து ராம்நகர், கனகபுரா, சென்னப்பட்டணா, மாகடி ஆகிய நகரங்கள் பிரிக்கப்பட்டன. ராம்நகரை தலைமை இடமாக கொண்டு, ராம்நகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
நீயா, நானா போட்டி
குமாரசாமியின் தந்தை தேவகவுடா, 1994ல் நடந்த சட்டசபை தேர்தலில் ராம்நகர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று முதல்வர் ஆனார். தந்தை பாணியில் மகன் குமாரசாமியும் 2004 சட்டசபை தேர்தலில் ராம்நகரில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
தங்களுக்கு அரசியல் வாழ்வு கொடுத்த ராம்நகர் மக்களுக்காக, ராம்நகர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டதாக குமாரசாமி கூறினார்.
ராம்நகர் மாவட்ட அரசியலில் குமாரசாமிக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் இடையில் பல ஆண்டுகளாக 'நீயா, நானா' பிரச்னை உள்ளது.
இம்மாவட்டத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ஒக்கலிக சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிவகுமாரும், குமாரசாமியும் ஒக்கலிகர்கள் ஆவர்.
தேவகவுடா பிரதமராக இருந்ததால், ராம்நகர் மாவட்ட மக்களுக்கு அவர் மீது தனி அன்பு உண்டு. அதே அன்பை குமாரசாமி மீதும் காட்டினர்.
ராம்நகர் மக்களிடம் இருந்து தேவகவுடா, குமாரசாமிக்கு கிடைக்கும் அன்பு தனக்கும் வேண்டுமென, சிவகுமார் நினைக்கிறார். இவரும் ராம்நகரின் கனகபுராவைச் சேர்ந்தவர்.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. சிவகுமார் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் சித்தராமையா முதல்வரானார். சிவகுமார் துணை முதல்வர் பதவி கிடைத்தது.
கடந்த ஆண்டுநவம்பரில், ராம்நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், சிவகுமார் பேசும்போது, 'ராம்நகர் மாவட்ட மக்கள் அனைவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள். கூடிய விரைவில் ராம்நகர் மாவட்டத்தை பெங்களூருடன் இணைக்க முயற்சி செய்வோம்' என கூறியிருந்தார்.
முதல்வருக்கு நெருக்கடி
இந்நிலையில், நேற்று முன்தினம் பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையாவை, சிவகுமார் தலைமையில் ராம்நகர் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் - எம்.எல்.சி.,க்கள் சந்தித்துப் பேசினர்.
அப்போது ராம்நகர், மாகடி, கனகபுரா, ஹாரோஹள்ளி, சென்னப்பட்டணா ஆகிய ஐந்து தாலுகாக்களை ஒருங்கிணைத்து, 'பெங்களூரு தெற்கு மாவட்டம்' உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
நிலத்தின் மதிப்பு உயரும்
சிவகுமார் கூறுகையில், ''நாங்கள் அனைவரும் பெங்களூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். யாரோ சிலர், ராம்நகரை தனி மாவட்டமாக உருவாக்கினர். ஆனால் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை. ராம்நகர் மாவட்டத்தை பெங்களூரில் இணைப்பதன் மூலம், நிறைய தொழிற்சாலைகள் வரும். மக்களின் நிலத்தின் மதிப்பு உயரும். எங்களுக்கு மக்களின் நலன் தான் முக்கியம்,'' என்றார்.
சென்னப்பட்டணா தேர்தல்
மக்களின் நலனுக்காக என்று சிவகுமார் கூறினாலும், ராம்நகர் மாவட்டத்தை பெங்களூரில் இணைக்கும் விஷயத்தில் அரசியல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
“ராம்நகர் மாவட்டத்தை உருவாக்கியது, நான் தான்,” என, குமாரசாமி சொல்லி வருகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராம்நகர் மாவட்டத்தை பெங்களூரில் இணைத்து, அதன் மூலம் தனது செல்வாக்கை நிலை நாட்ட, சிவகுமார் கணக்கு வைத்துள்ளார்.
ஒருவேளை, ராம்நகர் மாவட்டம் பெங்களூரு நகருக்குள் இணைக்கப்பட்டால், ராம்நகர் மாவட்டத்தில் நிலத்தின் மதிப்பு எக்கசக்கமாக உயரும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மக்களிடமிருந்து தனக்கு நற்பெயர் கிடைக்கும் என, சிவகுமார் கருதுகிறார்.
சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, சிவகுமார் மீது உள்ளது. இதனால் ராம்நகர் மாவட்டத்தை பெங்களூருடன் இணைக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார் என்று, அரசியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
'கொஞ்சமாவது புத்தியிருக்கா?'
மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டி:
அரசியல் காரணங்களுக்காக, ராம்நகர் மாவட்டத்தை, பெங்களூருடன் இணைக்க முயற்சி நடக்கிறது. எப்போது வேண்டும் என்றாலும் இணைத்துக் கொள்ளட்டும். நான் மீண்டும் முதல்வர் ஆவேன். அப்போது ராம்நகர் மாவட்டம், மீண்டும் உருவாகும். சிவகுமார் மட்டுமே, நான் பெங்களூருக்காரர் என்று சொல்கிறார். மாவட்ட மக்கள் யாரும் அப்படி சொல்லவில்லை.
ராம்நகரை பெங்களூருடன் இணைப்பதால் அவருக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. இம்மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களில், ராம்நகர் மாவட்டம் என்று உள்ளது. பெங்களூரு தெற்கில் இணைத்தால், ஆவணங்களை மாற்ற மக்கள் என்ன செய்வார்? மக்களை அலைக்கழிக்க வைப்பது இவர்கள் செய்யும் சாதனை.
சிவகுமாருக்கு கொஞ்சமாவது புத்தி இருந்தால் ராம்நகர்-, சென்னப்பட்டணாவை இரட்டை நகரமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெயர் பிடிக்கவில்லையா?
பா.ஜ., -- எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா அளித்த பேட்டி:
ராம்நகர் மாவட்டத்தை, பெங்களூரு தெற்கில் இணைத்து, என்ன செய்யப் போகின்றனர் என்று தெரியவில்லை. இம்மாவட்ட மக்களின் நிலத்தை கொள்ளையடிக்கும் முயற்சி நடக்கப்போகிறது. இம்மாவட்ட பெயரில் 'ராம்' என்ற வார்த்தை இருப்பது, காங்கிரசுக்கு பிடிக்கவில்லை. இதனால் பெங்களூரு தெற்கு மாவட்டம் என மாற்றபார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாங்களும் ராமர் பக்தர்
ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன் கூறுகையில், ''நாங்கள் அடிப்படையில் பெங்களூருக்காரர்கள். ராம்நகர் மாவட்டத்தை உருவாக்கியவர்கள், மாவட்டத்திற்காக எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யவில்லை.
மக்களை பற்றி சிந்தித்து கூட பார்க்கவில்லை. பெங்களூரு என்று உலக அளவில் வேகமாக வளர்கிறது. ஆனால் ராம்நகரில் வளர்ச்சி குறைவாக உள்ளது. பெங்களூருடன் இணைத்தால் ராம்நகர் வளரும். நிறைய தொழில் வளங்கள் உருவாகும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
ராம்நகர் பெயரில் ராமர் இருப்பதால் காங்கிரசுக்கு பிடிக்கவில்லை என்று, பா.ஜ.,வினர் கூறுகின்றனர். நாங்களும் ராமர் பக்தர்கள் தான். பெங்களூரு தெற்கு மாவட்டம் என்று இருக்கும். ஆனால் மாவட்ட தலைநகராக 'ராம்நகர்' தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.