ADDED : ஜன 20, 2025 07:00 AM

பெலகாவி வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆசிப் செய்ட். இவர், பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் ஆதரவாளராக உள்ளார். முதல்முறை எம்.எல்.ஏ., வாக இருந்தாலும், அமைச்சர் பதவி எதிர்பார்க்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிப் செய்ட் அளித்த பேட்டியில், 'நான் உட்பட காங்கிரசின் புதிய எம்.எல்.ஏ.,க்கள் 10 க்கும் மேற்பட்டோர், துபாய், சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்ல உள்ளோம்' என்று கூறி இருந்தார். இதன் பின்னணியில் சதீஷ் ஜார்கிஹோளி இருப்பதாக சந்தேகம் எழுந்தது.
முதல்வர் பதவியை எதிர்பார்க்கும் சதீஷ், ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை சுற்றுலா அழைத்து சென்று, அவர்களை தனக்கு ஆதரவாக பேச வைக்க முயற்சிப்பதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் ஆசிப் செய்ட் வீட்டிற்கு நேற்று காலை சிவகுமார் சென்றார். ஆசிப் செய்ட், அவரது சகோதரரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பெரோஸ் செய்ட் ஆகியோருடன், அரை மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினார். பின், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பெலகாவியில் நாளை நடக்கும் காங்கிரஸ் மாநாடு தொடர்பாக, ஆசிப் செய்ட்டுடன் ஆலோசித்ததாக சிவகுமார் கூறினார். ஆனாலும் சதீஷ் கோஷ்டியில் இருந்து விலகி, தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு இருக்கலாம் என்று, தகவல் வெளியாகி உள்ளது.