சிவகுமார் முதல்வராவார்: சித்து முன்னிலையில் ஜெயின் முனி ஆரூடம்
சிவகுமார் முதல்வராவார்: சித்து முன்னிலையில் ஜெயின் முனி ஆரூடம்
ADDED : ஜன 23, 2025 05:10 AM

ஹூப்பள்ளி: “சிவகுமார், முதல்வர் ஆவது உறுதி,” என, ஜெயின் முனி குனதரநந்தி மஹராஜ் ஆரூடம் கூறியதால், அவரது ஆதரவாளர்கள் குஷி அடைந்துள்ளனர்.
ஹூப்பள்ளியின் வரூரின், நவகிரஹ தீர்த்ததலத்தில் மஹா மஸ்தாபிஷேகம் நடந்து வருகிறது. நேற்றைய நிகழ்ச்சிகளில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், ஜெயின் முனி குணதரநந்தி மஹராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஜெயின் முனி ஆற்றிய உரை:
சிவகுமார் முதல்வராகியே தீருவார். இவர் காங்கிரசுக்காக பட்ட கஷ்டம், கொஞ்சம், நஞ்சமல்ல. சிவகுமார் முதல்வராக வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு உள்ளது. ஜெயினர்களுக்கு கொடுத்து பழக்கம். வேண்டுவது தெரியாது. ஆனால் இப்போது அரசிடம் வேண்டுகிறோம். கார்ப்பரேஷன், வாரியங்களில் ஜெயின் சமுதாயத்தினருக்கு பதவி தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜெயின் முனியின் ஆரூடத்தால், சிவகுமார் ஆதரவாளர்கள் குஷி அடைந்துள்ளனர். இவரது ஆசி பலிக்க வேண்டும் என, விரும்புகின்றனர்.
தொடர்ந்து சிவகுமார் பேசியதாவது:
இதற்கு முன்பு வினய் குருஜியும், இதே வார்த்தையை கூறியிருந்தார். இப்போது குணதரநந்தி மஹராஜர் என்னை முதல்வராகும்படி ஆசிர்வதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அகிம்சை, சத்தியம், தியாகத்துக்கு மறுபெயர் ஜெயின் மதம். இந்த சிவகுமார் உங்களுடன் எப்போதும் இருப்பார். என் மீது நம்பிக்கை வையுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விஸ்வநாத் அதிரடி
இதற்கிடையில், பெங்களூரில் துணை முதல்வர் சிவகுமாரை, நேற்று பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் சந்தித்துப் பேசினார். பின் அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா தேவையின்றி பரப்பி வரும் குழப்பம், காங்கிரசின் பெயரையும், புகழையும் கெடுக்கிறது. காங்கிரசை கட்டியது சித்தராமையா அல்ல. காங்கிரசை உருவாக்கியது யார், என்ன செய்ய வேண்டும் இதெல்லாம் தேவையற்றது.
மாநிலத்தில் 136 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு சிவகுமாரின் பங்களிப்பு அதிகம். அவர் முதல்வராவது உறுதி. 'முடா' வழக்கில் முதல்வர் சித்தராமையாவின் கவுரம் பாழாகிவிட்டது. மைசூரு மக்களுக்கு வீடு கட்ட இடம் தரவில்லை. ஆனால், முதல்வர், அமைச்சர்கள் தங்களுக்கு தாங்களே மனைகளை ஒதுக்கிக் கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

