சென்னப்பட்டணா வேட்பாளர் நான் தான் என்கிறார் சிவகுமார்
சென்னப்பட்டணா வேட்பாளர் நான் தான் என்கிறார் சிவகுமார்
ADDED : அக் 13, 2024 11:10 PM

மைசூரு: ''சென்னப்பட்டணா இடைத்தேர்தலில், எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் போட்டியிட மாட்டார்கள். நானே வேட்பாளர்,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மைசூரு தசரா வெற்றிகரமாக முடிந்து உள்ளது. இதற்காக உழைத்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் மஹாதேவப்பா, அதிகாரிகள், தசரா குழுவினர் உட்பட அனைவருக்கும் எனது நன்றி.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், சென்னப்பட்டணாவில் நாங்கள் தோல்வி அடைந்தோம்.
லோக்சபா தேர்தலில், பெங்களூரு ரூரலில் தோற்றோம். ஆனால், சென்னப்பட்டணா மக்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு, அதிக ஓட்டுகள் அளித்தனர். இது எங்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.
இடைத்தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர், யாராக இருந்தாலும் பிரச்னை இல்லை. அவர்களை பற்றி பேச மாட்டோம். காங்கிரஸ் வேட்பாளராக எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும், போட்டியிட மாட்டார்கள். நானே வேட்பாளர்.
சித்தாந்த அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. பா.ஜ.,வினர் எதற்கு எடுத்தாலும், எங்களை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்கின்றனர். இன்னும் 10 ஆண்டுகள் நாங்கள் தான் ஆட்சியில் இருப்போம்.
மும்பையில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். இந்த கொலையின் மூலம் மஹாராஷ்டிராவில் சட்டம் - ஒழுங்கு சரி இல்லை என்று தெரிந்து உள்ளது. தேர்தல் நேரம் இது. பாபா சித்திக் ஆதரவாளர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.