தமிழகத்துக்கு கர்நாடகா திறந்து விட்ட தண்ணீரில் மேகதாது அணை கட்ட ஆதரவு கேட்கும் சிவகுமார்
தமிழகத்துக்கு கர்நாடகா திறந்து விட்ட தண்ணீரில் மேகதாது அணை கட்ட ஆதரவு கேட்கும் சிவகுமார்
ADDED : ஆக 10, 2024 06:24 AM

மாண்டியா: ''தமிழகத்துக்கு கர்நாடகா திறந்த விட்ட தண்ணீரில், 71 டி.எம்.சி., கடலில் கலந்துள்ளது. இப்படி தண்ணீர் வீணாவதை தடுப்பதற்காகவே, மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் திட்டம். கடலில் வீணாக கலக்கும் கூடுதல் தண்ணீரை அணையில் சேகரித்து, தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக தான் அனுமதி அளிக்கும்படி கோருகிறோம்,'' என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், மாநிலத்தின் துணை முதல்வரும், நீர்ப்பாசன துறை அமைச்சருமான சிவகுமார், மாண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை, பிருந்தாவன் பூங்காவை, பேட்டரி காரில் சென்று நேற்று ஆய்வு செய்தார். பூங்காவை மேம்படுத்துவது தொடர்பாக, மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
* 149 டி.எம்.சி.,
பின், சிவகுமார் கூறியதாவது:
கே.ஆர்.எஸ்., அணையின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில், 200 ஏக்கர் நிலத்தில், பிருந்தாவன் பூங்கா மேம்படுத்தப்படும். ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுற்றுலா மேம்பட்டு, தொழில்கள் வளர்ச்சி அடையும்.
ஆண்டுதோறும் கர்நாடக அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு, 177 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும். இதில், நடப்பாண்டில் இதுவரை 149 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரி கரையோரங்களில் உள்ள ஏரிகளை நிரப்பும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோட்டக்கலை, விவசாய துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, விவசாயிகள் பயிரிட்டு பயனடைய வேண்டும்.
* மேகதாது அணை
'மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த, ஐந்து நிமிடங்களில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, மத்திய அரசிடம் அனுமதி பெற்று தரப்படும்' என்று தேர்தலின் போது, குமாரசாமி கூறியிருந்தார். ஆனால், இதுவரை அனுமதி பெற்று தரவில்லை.
மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நானே சந்தித்து மனு அளித்துள்ளேன். சட்ட ரீதியாக போராடி, அனுமதி பெறப்படும். எங்கள் கணிப்புப்படி, தமிழகம் வழியாக நடப்பாண்டு 71 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்துள்ளது.
இப்படி தண்ணீர் வீணாவதை தடுப்பதற்காகவே, மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் திட்டம். அணை கட்டுவதால், 66 டி.எம்.சி., தண்ணீர் சேகரித்து வைக்கப்படும். அதுவும் கடலில் வீணாக கலக்கும் கூடுதல் தண்ணீரை அணையில் சேகரித்து, தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக தான் அனுமதி அளிக்கும்படி கோருகிறோம்.
* காவிரி ஆரத்தி
கங்கா ஆரத்தி போன்று, கே.ஆர்.எஸ்., அணை பகுதியில், காவிரி ஆரத்தி எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆரத்தி எடுப்பதற்கு தனி இடம் ஒதுக்கப்படும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நானே சில இடங்களை காண்பித்துள்ளேன்.
மாண்டியாவில் உள்ள மை சுகர் அரசு சர்க்கரை ஆலை உட்பட இப்பகுதியில் இருக்கும் ஐந்தாறு சர்க்கரை ஆலைகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு எப்போதும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

