சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்
சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்
ADDED : டிச 26, 2024 06:43 AM

பெங்களூரு: நடிகர் சிவராஜ்குமாருக்கு, அமெரிக்காவில் புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அவர் நலமாக இருப்பதாக, டாக்டர் கூறியுள்ளார்.
கன்னட திரையுலகின் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார், 62. இதுவரை 125 படங்களில் நடித்துள்ளார். இவர், சமீபநாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பரிசோதனையில், அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதற்கான அறுவை சிகிச்சைக்காக சிவராஜ்குமார், சில நாட்களுக்கு முன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். உடன், அவரது மனைவி கீதா, மைத்துனர் மது பங்காரப்பா சென்றுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கப்பட்டார்.
நேற்று முன்தினம் அவருக்கு, சிறுநீரக புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அறுவை சிகிச்சைக்கு முன், சிவராஜ்குமார் தன் குடும்பத்தினர், நண்பர்களுடன் பேசியுள்ளார். அவரை முதல்வர் சித்தராமையாவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு தைரியம் கூறினார். விரைவில் குணமடைந்து திரும்பும்படி வாழ்த்தினார்.
அவர் நலமடைந்து திரும்ப வேண்டும் என, அவரது ரசிகர்கள், மலை மஹாதேஸ்வரா மலையில் சிறப்பு பூஜை நடத்தினர். முடி காணிக்கை செலுத்தினர்.
இந்நிலையில், சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் முருகேஷ் மனோகர் கூறியதாவது:
சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அறுவை சிகிச்சைக்கு முன்பும், அதன் பின்னரும் அவரது உடல் ஆரோக்கியம் நன்றாகவே உள்ளது. தற்போது அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
எங்களின் டாக்டர்கள் குழு மற்றும் மருத்துவ ஊழியர்கள், சிவராஜ்குமாரின் உடல் நிலையை உன்னிப்பாக கவனிக்கின்றனர். அவரது சிறுநீரகத்தில் இருந்த புற்றுநோய் பாதிப்பு முற்றிலும் அகற்றப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மது பங்காரப்பா கூறுகையில், ''சிவராஜ்குமார் நலமாக இருக்கிறார். அறுவை சிகிச்சை வெற்றி அடைந்துள்ளது. அவர் மீது ரசிகர்கள், நலம் விரும்பிகள், நண்பர்கள், ஊடகத்தினர் காட்டிய அன்புக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். உங்களின் ஆதரவால், சிவராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு சக்தி கிடைத்துள்ளது. அவரது உடல்நிலை குறித்து, அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும். ரசிகர்கள், விசுவாசிகள் கவலைப்பட வேண்டாம்,'' என்றார்.
கீதா கூறுகையில், ''அனைவரின் பிரார்த்தனை பலித்துள்ளது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார். அவர் வேகமாக குணமடைந்து வருவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்,'' என்றார்.

