சாக்கடை கழிவுகளை கைகளால் சுத்தம் செய்ய சென்னை உள்ளிட்ட ஆறு நகரங்களுக்கு தடை
சாக்கடை கழிவுகளை கைகளால் சுத்தம் செய்ய சென்னை உள்ளிட்ட ஆறு நகரங்களுக்கு தடை
ADDED : ஜன 31, 2025 12:27 AM

புதுடில்லி: சென்னை உட்பட ஆறு பெருநகரங்களில் சாக்கடை கழிவுகள் அல்லது மனித கழிவுகளை, மனிதர்கள் கைகளால் சுத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் டாக்டர் பல்ராம் சிங் என்பவர், 'ரிட்' மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'சாக்கடைகளை கைகளால் துப்புரவு செய்ய தடை விதிக்கும் சட்டம் நாட்டில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே, இதுகுறித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்சு துலியா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், 'நாடு முழுதிலும் உள்ள 775 மாவட்டங்களில், 456 மாவட்டங்களில் மனிதக் கழிவுகளை அல்லது சாக்கடைகளை மனிதர்கள் கைகளால் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்வதில்லை' என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'அப்படி என்றால் டில்லி உள்ளிட்ட மற்ற நகரங்களில் நிலை என்ன?' என, கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு, 'கடந்தாண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் இதே வழக்கில் பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசு உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
'ஆனால் குறிப்பிட்ட சில மாநிலங்களில் உள்ள பெரு நகரங்கள் இதனை முறையாக பின்பற்றபடவில்லை. டில்லி போன்ற பெரு நகரங்கள் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை நிறைவேற்றவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டம், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு ஆகியவை இருந்தும், அவை முறையாக செயல்படுத்தப்படவில்லை.
இந்த வழக்கில் மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறோம். இதன்படி இன்று முதல் சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஆறு பெரு நகரங்களில் கைகளால் மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது.
கைகளால் சாக்கடையை சுத்தம் செய்யவும் இந்த தடை உத்தரவு பொருந்தும்.
மேலும், பிப்ரவரி 13ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பெரு நகரங்களின் தலைமை செயல் அதிகாரிகள், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு மாற்றாக வேறு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்; அதை எப்போது சாத்தியப்படுத்த முடியும் போன்ற விபரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபகள், விசாரணையை பிப்., 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.