நெலமங்களா விபத்தில் பலி... ஆறு பேர்; கார் மீது கன்டெய்னர் லாரி விழுந்து
நெலமங்களா விபத்தில் பலி... ஆறு பேர்; கார் மீது கன்டெய்னர் லாரி விழுந்து
ADDED : டிச 22, 2024 09:38 AM

நெலமங்களா: உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையை பார்க்கச் சென்ற தொழிலதிபரின் கார் மீது, கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் அவரும், அவர் குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், விஜயபுராவை சேர்ந்தவர் சந்திரயாகப்பா கவுல் 46; தொழிலதிபர். இவர் பெங்களூரின் ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் குடும்பத்தினருடன் வசித்தார்.
இவரது மனைவி கவுராபாய், 40. தம்பதிக்கு ஜான், 16, என்ற மகனும், தீக்ஷா, 12, ஆர்யா, 6, என்ற இரண்டு மகள்களும் இருந்தனர்.
சந்திரயாகப்பா கவுல், எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் பொறியியலில் பட்டப்படிப்பு முடித்தவர். 18 ஆண்டுகளுக்கு முன், பெங்களூரில் ஐ.ஏ.எஸ்.டி., சாப்ட்வேர் சொல்யூஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில், 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
தன் நிறுவனத்துக்காக பெங்களூரில் புதிதாக அலுவலகம் திறக்க முடிவு செய்திருந்தார்; அதற்கான பணிகளும் நடந்து வந்தன.
சந்திரயாகப்பாவின் தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. எனவே, தந்தையை பார்க்க விஜயபுராவுக்கு தன் குடும்பத்தினருடன் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.
சாலை மாறி பாய்ந்த லாரி
நேற்று முன்தினம் இரவு ஊழியர்களுடன் மீட்டிங் நடத்தினார். 'சில நாட்களுக்கு நான் ஊரில் இருக்கமாட்டேன்; நிறுவனத்தை பார்த்துக் கொள்ளுங்கள்' என, கூறியிருந்தார்.
நேற்று காலையில் தன் மனைவி, பிள்ளைகள், தன் தம்பி மனைவி விஜயலட்சுமி, 35, ஆகியோருடன் காரில் விஜயபுராவுக்கு புறப்பட்டார்.
காலை 11:00 மணியளவில், பெங்களூரு புறநகர், நெலமங்களாவின், பெங்களூரு - துமகூரு தேசிய நெடுஞ்சாலை - 48ல், தாளகெரே அருகில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது பக்கத்துச் சாலையில், எதிரே அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பு மீது மோதி பக்கத்து சாலைக்கு பாய்ந்து ஓடியது.
எதிரே வந்த சில வாகனங்கள் மீது மோதிய பின், தொழிலதிபர் சந்திரயாகப்பா கார் மீது கவிழ்ந்தது.
கார் முழுதுமாக அப்பளமாக நொறுங்கியது. இதில் பயணம் செய்த தொழிலதிபர் குடும்பத்தின் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஒரு கார், பைக்குகள், பஸ் ஆகியவை சேதமடைந்தன.
போக்குவரத்து பாதிப்பு
தகவலறிந்து அங்கு வந்த நெலமங்களா போக்குவரத்து போலீசார், மூன்று கிரேன்களை வரவழைத்து, காரின் மீது கவிழ்ந்திருந்த கன்டெய்னரை அப்புறப்படுத்தினர்.
அப்பகுதியினர் உதவியுடன், காரில் இருந்த உடல்களை வெளியே எடுத்தனர்.
இந்த சம்பவத்தால், நெடுஞ்சாலையில் பல கி.மீ., வரை வாகனங்கள் அணிவகுத்தன. போக்குவரத்து ஸ்தம்பித்தது. மணிக்கணக்கில் வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன.
போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சுமூகமாக்கினர். மாவட்ட எஸ்.பி., பாபா உட்பட, உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொழிலதிபர் விபத்தில் இறந்த தகவலை கேட்டறிந்த, நிறுவன ஊழியர்கள் பணியை நிறுத்திவிட்டு, வருத்தத்துடன் வீடு திரும்பினர்.
நெலமங்களா போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகிஉள்ளது.
சம்பவத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரி ஓட்டுனர் ஆரிப் அன்சாரி கூறியதாவது:
தாபஸ்பேட் ஜிந்தால் தொழிற்சாலையில் இருந்து, அலுமினியம் பொருட்களை கன்டெய்னரில் ஏற்றிக் கொண்டு, பெங்களூரின், ஜிந்தால் நிறுவனத்துக்கு சென்றபோது, விபத்து நேர்ந்தது.
என் கன்டெய்னர் முன்பாக, திடீரென கார் குறுக்கே வந்தது. அதன் மீது மோதுவதை தவிர்க்க முற்பட்டபோது, கன்டெய்னர் கட்டுப்பாட்டை இழந்தது.
சாலைத்தடுப்பு மீது மோதி, பக்கத்து சாலைக்கு பாய்ந்து, எதிரே வந்த கார் மீது கவிழ்ந்தது. எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் மயங்கிவிட்டேன். மருத்துவமனைக்கு வந்த பின், எனக்கு விழிப்பு வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
'வோல்வோ' காரில் சென்று கொண்டிருந்த ஆறு பேர், கன்டெய்னர் விழுந்து உயிரிழந்தனர். நடந்த சம்பவத்துக்கு யார் காரணம் என்பது, விசாரணைக்கு பின் தெரிய வரும். விசாரணை நடக்கிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- லாபு ராம், ஐ.ஜி.பி., மத்திய மண்டலம்