கார் மீது கன்டெய்னர் லாரி விழுந்து ஒரே குடும்பத்தின் ஆறு பேர் பலி
கார் மீது கன்டெய்னர் லாரி விழுந்து ஒரே குடும்பத்தின் ஆறு பேர் பலி
ADDED : டிச 22, 2024 08:34 AM

நெலமங்களா : கர்நாடகாவில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையை பார்க்கச் சென்ற தொழிலதிபரின் கார் மீது, கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததால் அவரும், அவர் குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், விஜயபுராவை சேர்ந்தவர் சந்திரயாகப்பா கவுல் 46; தொழிலதிபர். இவர், பெங்களூரின் ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் குடும்பத்தினருடன் வசித்தார். இவரது மனைவி கவுராபாய், 40. தம்பதிக்கு ஜான், 16, என்ற மகனும், தீக்ஷா, 12, ஆர்யா, 6, என்ற இரண்டு மகள்களும் இருந்தனர்.
சந்திரயாகப்பாவின் தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. தந்தையை பார்க்க விஜயபுராவுக்கு தன் குடும்பத்தினருடன் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.
நேற்று காலையில் தன் மனைவி, பிள்ளைகள், தன் தம்பி மனைவி விஜயலட்சுமி, 35, ஆகியோருடன் காரில் விஜயபுராவுக்கு புறப்பட்டார். காலை 11:00 மணியளவில், பெங்களூரு புறநகர், நெலமங்களாவின் பெங்களூரு -துமகூரு தேசிய நெடுஞ்சாலை - 48ல், தாளகெரே அருகில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது பக்கத்து சாலையில், எதிரே அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பு மீது மோதி பக்கத்து சாலைக்கு பாய்ந்து ஓடியது; எதிரே வந்த சில வாகனங்கள் மீது மோதிய பின், தொழிலதிபர் சந்திரயாகப்பா கார் மீது கவிழ்ந்தது.
கார் முழுமையாக நொறுங்கியது. இதில் பயணம் செய்த தொழிலதிபர் குடும்பத்தின் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒரு கார், பைக்குகள், பஸ் ஆகியவை சேதமடைந்தன.போக்குவரத்து போலீசார், மூன்று கிரேன்களை வரவழைத்து, காரின் மீது கவிழ்ந்திருந்த கன்டெய்னரை அப்புறப்படுத்தினர். அப்பகுதியினர் உதவியுடன், காரில் இருந்த உடல்களை வெளியே எடுத்தனர்.
இந்த சம்பவத்தால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. மணிக்கணக்கில் வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன.