ADDED : செப் 14, 2025 03:26 AM
புதுடில்லி:கார் திருடும் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டு, நான்கு கார்கள், போலி நம்பர் பிளேட்டுகள், சாவிகள், போலி பதிவுச் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டில்லி ஹிண்டர் கால்வாய் சாலை அருகே ஆகஸ்ட் 27ம் தேதி போலீசார் வாகன சோதனை நடத்திய போது, கருப்பு நிற சொகுசு கார் ஒன்றின் ஆவணங்களைக் கேட்டனர். அந்தக் காரை ஓட்டி வந்த ஜாமியா நகரைச் சேர்ந்த டிரைவர் காசிம் ஹுசைன்,25, ஆவணங்கள் இல்லாமல் அந்தக் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.
அந்தக் கார் குறித்து போலீசார் ஆய்வு செய்த போது, அந்தக் கார், பிரீத் விஹாரில் திருடப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காசிம் கைது செய்யப்பட்டு, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பல திருட்டு வழக்குகளில் தொடர்புள்ள காசிம், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து டில்லி, மீரட், அலிகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கார்களை திருடி, போலி நம்பர் பிளேட் பொருத்தி விற்பதை ஒப்புக் கொண்டார்.
காசிமிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், டில்லி மற்றும் காஜியாபாத்தில் குஸன்வாஜ், 30, மற்றும் தாஜ் முகமது, 29, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், பீஹார் மாநிலத்தில் திருடப்பட்ட காருடன் அபுசார் என்ற சோனு,27,வும் கைது செய்யப்பட்டார்.
அதேபோல, திருட்டுக் கார்களை விற்கும் கும்பலைச் சேர்ந்த அமிர் மாலிக்,28, மற்றும் ஆசிப் கான், 45, ஆகியோரும் அலிகாரில் கைது செய்யப்பட்டனர். மொத்தம் நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆறு பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.