எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு 'விசிட்': பயணிகள் அலறல், பீதி; வீடியோ வைரல்
எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு 'விசிட்': பயணிகள் அலறல், பீதி; வீடியோ வைரல்
ADDED : செப் 23, 2024 09:25 AM

புதுடில்லி: ஜபல்பூர்-மும்பை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பாம்பு வந்ததை கண்டு, பயணிகள் பயந்து கூச்சலிட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மத்திய பிரதேசம் ஜபல்பூரில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த, எக்ஸ்பிரஸ் ரயிலின் ஜி3 பெட்டியில் பாம்பு ஒன்று வந்தது. பாம்பு தெரிந்ததும், பயணிகள் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர். பின்னர், பாதிக்கப்பட்ட பெட்டி பிரிக்கப்பட்டு, ரயில் ஜபல்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. ரயில் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையை சமாளித்து பயணிகளை காப்பாற்றினர்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: 'இந்த சம்பவம் குறித்து கவனிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படும். பயணிகளின் பாதுகாப்பே முதன்மையானது. ரயில்வே இது போன்ற விஷயங்களை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது' என்றார். இது குறித்து ரயில்வே அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.