ADDED : ஜூலை 06, 2025 11:43 PM

பாலக்காடு; ''பாம்புக்கடியால் ஏற்படும் மரணங்களை ஒழிக்கும் மாவட்டத்தின் இலக்கை அடைய, பாம்பு தன்னார்வலர்களுக்கு உதவ முடியும்,'' என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா தெரிவித்தார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில், வனத்துறையின் தலைமையில், பாலக்காடு சமூக வனவியல் பிரிவின் கீழ், புதிய பாம்பு தன்னார்வலர்களுக்கு அளித்து வந்த பயிற்சியின் நிறைவு விழாவை துவக்கி வைத்து, மாவட்ட கலெக்டர் பிரியங்கா கூறியதாவது:
பாம்புக்கடியால் ஏற்படும் மரணங்களை ஒழிக்கும், மாவட்டத்தின் இலக்கை அடைய பாம்பு தன்னார்வலர்களுக்கு உதவ முடியும். பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன கவனிக்க வேண்டும் என்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர்களுக்கு முடியும். வனத்துறை நடத்தும் இந்த பயிற்சி பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், கிழக்கு வட்ட தலைமை வனப் பாதுகாவலர் விஜயானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கோட்ட வன அலுவலர் ரவிக்குமார் மீனா, உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார், சமூக வனவியல் துறை உதவி வன பாதுகாவலர் சுமு ஸ்கரியா, உதவி வனப் பாதுகாவலர் முகமது அன்வர் ஆகியோர் பேசினர்.
73 பாம்பு தன்னார்வலர்கள் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.