சபாஷ் பென்னி...! திருடுபோன ரூ.1 கோடியை மீட்க உதவிய நாய்!
சபாஷ் பென்னி...! திருடுபோன ரூ.1 கோடியை மீட்க உதவிய நாய்!
UPDATED : அக் 19, 2024 11:23 AM
ADDED : அக் 19, 2024 07:58 AM

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் விவசாயி வீட்டில் திருடு போன 1 கோடி ரூபாய், போலீஸ் மோப்பநாய் உதவியால் மீட்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் மாவட்டம் சரக்வாலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் உடேசின் சோலங்கி. லோத்தல் பகுதியில் உள்ள தமது நிலத்தை விற்ற அவர், அதில் கிடைத்த ரூ.1.07 கோடியை வீட்டில் வைத்து இருந்தார். கடந்த 11ம் தேதி புகுந்த திருடர்கள், அந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து உடேசின் போலீசில் புகார் அளிக்க, விசாரணை தொடங்கியது. திருடர்கள் எப்படி இந்த சம்பவத்தை அரங்கேற்றினர் என்பதை விசாரிக்க 19 பேர் கொண்ட தனிப்படையை போலீசார் அமைத்தனர். இதில் பென்னி என்ற மோப்ப நாயும் இடம் பெற்று இருந்தது.
சம்பவ இடத்தில் பணம் இல்லாமல் காலியாக இருந்த பை ஒன்றை பென்னி மோப்பம் பிடித்தது. பின்னர், அதே பகுதியில் உள்ள புத்தா என்பவரின் வீட்டின் முன் சென்றது. இதையடுத்து, சந்தேக நபர்கள் பட்டியலில் இருக்கும் பலரையும், புத்தா என்பவர் உள்பட போலீசார் வரிசையாக நிற்க வைத்தனர்.
அங்கே மோப்ப நாய் பென்னி வரவழைக்கப்பட்டது. வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட சந்தேக நபர்களில் புத்தா என்பவரை பென்னி சரியாக அடையாளம் காட்ட, அவரை போலீசார் கைது செய்தனர்.
புத்தா வீட்டில் சோதனை நடத்திய போலீசார், கொள்ளை போன பணத்தை மீட்டனர். அவருக்கு உதவிய விக்ரம் என்பவரை போலீசார் பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: உடேசின் தமது நிலத்தை விற்க முடிவு செய்து நெருங்கிய நண்பர் புத்தா என்பவரை அணுகி உள்ளார். ஆனால் அவர் உதவி செய்ய மறுத்துள்ளார். பின்னர் தாமாகவே வெளியூர் சென்று நிலத்தை விற்று ரூ.1.07 கோடியை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
பணத்தை எங்கே வைப்பது என்று யோசித்து 7 லட்சம் ரூபாயை ஒரு பையிலும், 1 கோடியை மற்றொரு பையிலும் வைத்துள்ளார். பின்னர், அந்த பைகளை தமது வீட்டில் தானியங்கள் சேர்த்து வைத்து பெரிய பாத்திரம் ஒன்றில் வைத்துள்ளார்.
நிலம் விற்று பணத்துடன் ஊருக்கு உடேசின் வந்திருப்பதை புத்தா அறிந்து, அவரது நண்பர் விக்ரம் என்பவருடன் அதை கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளார். உடேசின் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்ற இருவரும் ஜன்னல் வழியாக பணத்தை திருடி உள்ளனர்.
இரண்டு பைகளில் 1 கோடி ரூபாய் பணத்தை பையுடன் எடுத்துக் கொண்ட அவர்கள், மற்றொரு பையில் இருந்த 7 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு பையை அங்கேயே வீசிவிட்டனர். இந்த பை தான் கொள்ளையர்களை கண்டுபிடிக்க உதவியது. ஆனால் இந்த பையை உடேசின் மற்றும் அவருடன் இருந்த உறவினர்கள் தொட்டிருந்தனர். அதனால் விசாரணையில் சில தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்களை பெற்றும், மோப்ப நாய் உதவியுடனும் கொள்ளையர்களை பிடிக்க முடிந்தது.
இவ்வாறு போலீசார் கூறி உள்ளனர்.