ADDED : டிச 17, 2024 10:11 PM

மைசூரு; 'முடா' வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது புகார் செய்த, சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா தலைமறைவாகி விட்டார்.
'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் சிநேகமயி கிருஷ்ணா. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் மனைவி பார்வதிக்கு முதல்வர் சித்தராமையா 14 வீட்டுமனைகள் வாங்கிக் கொடுத்தார் என்று கவர்னரிடம் புகார் செய்தவரும் சிநேகமயி கிருஷ்ணா தான்.
மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் சேலைகளை, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக கோவில் அதிகாரி ரூபா மீது, சிநேகமயி கிருஷ்ணா போலீசில் புகார் செய்தார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ரூபா, தன்னை பணி செய்யவிடாமல் தடுப்பதாக சிநேகமயி கிருஷ்ணா மீது, மைசூர் கிருஷ்ணராஜா போலீசில் புகார் செய்தார். அதன்படி, மூன்று நாட்களுக்கு முன்பு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் தலைமறைவாகி விட்டார். மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.