100 ஆண்டு பழமையான அரசு தமிழ் பள்ளி கட்டடத்தின் 'சோக கீதம்'
100 ஆண்டு பழமையான அரசு தமிழ் பள்ளி கட்டடத்தின் 'சோக கீதம்'
ADDED : அக் 25, 2024 07:49 AM

- நமது நிருபர் -
அனுப்புநர்,
அரசு தமிழ் உயர் துவக்க பள்ளி
95, திம்மையா சாலை,
சிவாஜி நகர், பெங்களூரு.
பெறுநர்,
தமிழர்கள்,
கர்நாடகா.
குறிப்பு: தமிழ் பள்ளிகளை காக்க...
வணக்கம்,
நான், உங்களோட 'அரசு தமிழ் உயர் துவக்க பள்ளி' பேசுறேன்.
சுதந்திரத்துக்கு முன்னாடியே, பசங்களுக்கு கல்வி அறிவு ஊட்டணுமுன்னு, 1920ல் என்னை கட்டினாங்க. அப்போது இங்கிருந்த தமிழ் பசங்க மட்டுமல்ல, கன்னடம், தெலுங்குன்னு பல மொழி பசங்களும் இங்கு வந்து ஆர்வமா படிச்சாங்க.
அப்போது காலை வகுப்பு துவங்குவதற்கு முன்னும்; மதிய உணவு வேளை; பள்ளி முடிந்து செல்லும் போது மாணவர்களின் சத்தம் எனக்கு ரீங்காரமாக கேட்டுச்சு.
சந்தோஷமாக...
ஒவ்வொரு ஆண்டும் என் ஸ்கூலுக்கு வரும் பசங்க எண்ணிக்கை அதிகரிச்சிட்டே இருந்துச்சு. எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு. மாணவர்களோட வாழ்க்கைக்கு ஏணியாக இருந்த ஆசிரியர்களும் கல்வியின் முக்கியத்துவம் அறிஞ்சு, மாணவர்களை ஊக்குவிச்சாங்க.
என் நிழலில் படிச்ச மாணவ - மாணவியர், அரசு துறையில, தனியார் துறையில என பல துறையில பெரிய இடத்துக்கு தேர்வாகி, ரிட்டயர்டு ஆகிட்டு வந்தாங்க. இங்க தமிழ் மீடியம் மட்டுமல்ல, அரசோட ஆங்கில பள்ளியை சேர்ந்த 8, 9, 10 ம் வகுப்பும் பசங்களும் படிச்சு வந்தாங்க. 10 - 15 ஆண்டுக்கு முன்னாடி கூட, பத்து வகுப்பறையில, ஒண்ணாம் வகுப்புல இருந்து ஏழாம் வகுப்பு வரைக்கும் 250 பசங்க படிச்சு வந்தாங்க.
சேர்க்கை குறைவு
யார் கண் பட்டுச்சோ தெரியல. ஒவ்வொரு வருஷமா பசங்க என் பள்ளிக்கு வர்ரது கொறஞ்சி போச்சு. இதுக்கு என்ன காரணம்னு தெரியல. என்னோட கட்டடமும் பழசாகிடுச்சு. சிலர் அவ்வப்போது வந்து ஆய்வு செஞ்சாங்க, அப்புறம் அப்படியே விட்டுட்டு போயிட்டாங்க. ஒவ்வொரு முறையும் யாராவது வருவாங்க, என்ன சுத்தி சுத்தி பார்ப்பாங்க. 'டொனேஷன் தர்றேன்'னு சொல்றாங்க.
டையிங் ஸ்கூல்
ஆனா எனக்கு டொடேஷன் தர்றேன்னு சொன்னவங்க, யாரோ சொன்ன, 'டையிங் ஸ்கூல்'ங்கிறத நம்பி, வேற ஸ்கூலுக்கு டொனேஷன் கொடுத்துட்டாங்க. இப்படியே பலமுறை நடந்திருக்கு. ஏன் இந்த மாதிரி நடந்துக்கிறாங்கன்னு தெரியல.
என்னோட கட்டடத்துக்கு வயசாகிட்டே போச்சு. என்னால எவ்வளவு நாள் தான் தாக்கு பிடிக்க முடியும். கடந்த சில ஆண்டுக்கு முன்னாடி, மே மாசத்துல இரண்டு நாளா ஜோன்னு மழை பெய்ஞ்சிக்கிட்டே இருந்துச்சு. நானும் சமாளிச்சடலாம்னு இருந்தேன். ஆனா முடியல.
அதுவும் பசங்க இல்லாத நேரத்துல தான், என்னோட ஒரு பகுதி இடிஞ்சிது. அப்ப வந்து பார்த்தவங்க கூட, கட்டடத்த சீரமைக்கிறோம்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல. இப்ப பசங்க வேற கட்டடத்துல படிச்சு வர்றாங்க.
குப்பை கொட்டுமிடம்
காலப்போக்குல என் முன்னாடி குப்பைகளை கொட்டி, குப்பை தொட்டியா மாத்திட்டாங்க. பல முறை சொல்லியும் யாரும் கேட்கல. மாநகராட்சி குப்பை அள்ளுற தள்ளு வண்டிய, என்னோட கேட்ல செயினால பூட்டு போட்டுட்டு போயிடுவாங்க. காலையில குப்பையை அள்ளிட்டு வருவாங்க. பசங்க படிக்க கோவிலா இருந்த பள்ளிய, குப்பை கொட்டுற இடமா மாத்திட்டாங்க. இது பத்தி யாரும் கேள்வி கேட்கல.
இன்னக்கி தேதில, என்னோட பள்ளியில ஆறு மாணவர்கள், நான்கு மாணவியர்னு பத்தே பேர் தான் படிக்கிறாங்க. இவங்களுக்கு பாடம் சொல்லித்தர இரண்டு தமிழ் ஆசிரியைகளும்; ஒரு கன்னட ஆசிரியையும் பணியாற்றி வர்றாங்க.
இப்ப இந்த தொகுதி எம்.எல்.ஏ., இரண்டு ஆண்டுக்கு முன்னாடி, நம்ம பசங்க படிக்கிறதுக்காக புதிய கட்டடம் கட்டித்தர்றதா சொன்னாரு. கட்டடமும் கட்டிட்டு வர்றாங்க. இதுல, தரை தளத்துல நான்கு கிளாசும், முதல் தளத்துல நான்கு கிளாசும் இருக்கிறாப்ல கட்டுறாங்க.
நம்ம சிலிகான் சிட்டியில, கடந்த பத்து நாளா மழை பெஞ்சுகிட்டே இருந்துச்சு. இரண்டு நாள் முன்னாடி கூட, ஹென்னுார் பக்கத்துல ஆறு மாடி பில்டிங் இடிஞ்சு விழுந்துச்சு. 8 பேர் உயிரிழந்தாங்க.
மீண்டும் இடிந்தது
இதேபோல நடக்க கூடாதுன்னு தாங்கிட்டு நின்னேன். நேற்று காலையில 6:00 மணிக்கு என்னால முடியல; தளர்வு அடஞ்சிட்டேன். என்னோட முகப்பு பகுதி இடிஞ்சு, முன்னாடி இருந்த சுவத்துல தொப்புன்னு விழுந்தேன்.
நா விழுந்து, பக்கத்துல இருக்கிறவங்களுக்கு தொல்லை பண்ணல. ஆனாலும் என்னோட நெலமய சம்பந்தப்பட்டவங்களுக்கு சொல்லி இருக்கலாம். அதுவும் சொல்லல.
காலையில பசங்களுக்கு பாடம் சொல்லித்தர வந்த ஆசிரியைங்க, தமிழ் ஸ்கூல் பசங்களுக்கு இப்படி ஒரு நிலைமையான்னு என்னோட நிலைமைய பார்த்து வேதன அடைஞ்சாங்க.
எம்.எல்.ஏ., மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் சொன்னாங்க. எம்.எல்.ஏ.,வோட ஆளுங்க வந்து பார்த்து, அதிகாரியிடம் நடவடிக்கை எடுக்க சொன்னாங்க. அதிகாரிங்களும், என்னோட பாதி இடிஞ்சு விழுந்ததை மட்டும் அள்ளிட்டு போறதா சொல்லி ஜே.சி.பி., வண்டியை அனுப்பி வெச்சாங்க.
எனக்கு அதிர்ச்சியாகிடுச்சு. ஏற்கனவே தள்ளாடிட்டு இருந்த நான், இதுக்கு மேலயும் மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்க கூடாதுன்னு நினைச்சேன். நல்லவேள பாதி உடைஞ்ச சுவத்த இடிக்கும் போது, நானே மொத்தமா இடிஞ்சு விழுந்துட்டேன்.
பெங்களூரு உட்பட கர்நாடகத்துல எத்தனை லட்சம் தமிழர்கள் இருக்கிறாங்க. தமிழ், தமிழ்ன்னு சொல்ற பல பேர், என்னோட நிலைமைய தெரிஞ்சும் கண்டுக்காம விட்டுட்டாங்க.
ஒண்ணுமில்ல. இப்போது ஒரு செங்கல்லுக்கு 10 ரூபாய்ன்னு வெச்சாலும், இத்தனை லட்சம் பேர் பத்து, பத்து ரூபாய் கொடுத்தாலும், 7ம் வகுப்பு வரை மட்டும் இருக்கிற இந்த இடத்துல, உயர்நிலைப்பள்ளி, பி.யு., கல்லுாரியே கொண்டு வரலாம். ஆனா யார் அப்படி செய்வாங்க. என்ன தான் கண்டுக்காம விட்டுட்டீங்க. மாநிலத்துல மற்ற இடங்கள்ல இருக்கிற பள்ளிகளையாவது காப்பாத்துங்க.