சூரியசக்தி வேளாண் திட்டம் தோல்வி; மீண்டும் கெடுவை நீட்டிக்க பரிசீலனை
சூரியசக்தி வேளாண் திட்டம் தோல்வி; மீண்டும் கெடுவை நீட்டிக்க பரிசீலனை
ADDED : அக் 08, 2025 04:18 AM

புதுடில்லி : விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட சூரியசக்தி வேளாண் திட்டம் எதிர்பார்த்த அளவு வேகம் எடுக்காததை அடுத்து திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடுவை இரண்டாவது முறையாக நீட்டிப்பது குறித்து மத்திய அரசுபரிசீலித்து வருகிறது.
நாடு முழுதும் உள்ள விவசாயிகள் சூரியசக்தி பம்புகள் மற்றும் சிறு சூரியசக்தி மின் ஆலைகளை அமைத்து கொள்ள வசதியாக கடந்த 2019ல் மத்திய அரசு திட்டம் கொண்டு வந்தது.
சூரிய சக்தி மூலம், 30,800 மெகா வாட் அளவுக்கு சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இதற்காக மத்திய அரசு, 34,422 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
அப்போது கொரோனா பெருந்தொற்று பரவியதால், திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், வரும் 2026, மார்ச் மாதம் வரை திட்டத்திற்கான காலக்கெடுவை முதல் முறையாக நீட்டித்தது. அத்துடன் சூரியசக்தி மின் உற்பத்தியை, 34,800 மெகாவாட்டாகவும் அதிகரித்தது.
எனினும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்ந்து மந்த நிலை நிலவுகிறது. இதனால், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, இரண்டாவது முறையாக இத்திட்டத்திற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
மூன்று பகுதிகளாக இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அதில், 10,000 மெகா வாட் திறன் கொண்ட சிறு சூரியசக்தி மின் ஆலைகளை நிறுவுதலும் ஒன்று. ஆனால், இந்த இலக்கில் வெறும் 6.5 சதவீத அளவுக்கு மட்டுமே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது 650.49 மெகா வாட் அளவுக்கு மட்டுமே, சூரியசக்தி மின் உற்பத்தி செய்வதற்கான ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.
தெலுங்கானா, திரிபுரா, ஒடிஷா, குஜராத் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் இதுவரையிலும் இத்திட்டம் உயிர் பெறவில்லை. உத்தர பிரதேசம், தமிழகம், மஹாராஷ்டிரா, கோவா மற்றும் சத்தீஸ்கர் என, இத்திட்டம் அமலான மாநிலங்களில் கூட, ஒற்றை இலக்க அளவுக்கான மின் உற்பத்தியே செய்யப்பட்டு வருகிறது.
இதில் இரண்டாவது பகுதி மட்டுமே சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. மொத்தம் 12.72 லட்சம் சூரிய பம்புகளுக்கு ஒப்புதல் தரப்பட்ட நிலையில், 9.03 லட்சம் அளவுக்கு அவை நிறுவப்பட்டு உள்ளன.
மூன்றாவது பகுதி நிறுவப்பட்ட விவசாய சூரியசக்தி பம்புகளுக்கு மின் இணைப்பு வழங்குவது. தற்போது அதிலும் பெரும் சுணக்கம் காணப்படுகிறது.
எனவே, திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை மதிப்பாய்வு செய்து, அதை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு விரிவாக ஆராய்ந்து வருகிறது.