ரயில் பிளாட்பாரத்தில் காரை ஓட்டிய ராணுவ வீரர் கைது
ரயில் பிளாட்பாரத்தில் காரை ஓட்டிய ராணுவ வீரர் கைது
ADDED : ஆக 04, 2025 02:35 AM

மீரட் : உத்தர பிரதேசத்தில் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தின் மீரட் கன்டோன்மென்ட் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், ஜார்க்கண்ட் பதிவு எண் உடைய காரை ஒருவர், ஓட்டிச்செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அந்தக் காரை ஓட்டியது ராணுவ வீரர் சந்தீப் தாக்கா என்பதை கண்டறிந்தனர்.
அப்போது, அவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இதுதவிர, ரயிலுக்காக காத்திருந்த பயணியரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், இச்செயலில் ஈடுபட்ட அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதுதவிர, சந்தீப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்ததுடன், அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.