ராணுவ வீரரின் உடல் பாகங்கள் 56 ஆண்டுகளுக்கு பின் மீட்பு
ராணுவ வீரரின் உடல் பாகங்கள் 56 ஆண்டுகளுக்கு பின் மீட்பு
ADDED : அக் 02, 2024 01:28 AM

பத்தினம்திட்டா, ஹிமாச்சல பிரதேசத்தில், 1968ல் விமான விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் பாகங்கள், 56 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்., - 12 என்ற போக்குவரத்து விமானம், 102 ராணுவ வீரர்களுடன், கடந்த 1968 பிப்., 7ல் சண்டிகரில் இருந்து லே நோக்கி புறப்பட்டது.
ஹிமாச்சல பிரதேசத்தின் ரோஹ்தங் பாஸ் என்ற பனிச்சிகரத்தின் மேல் சென்றபோது விழுந்து நொறுங்கியது. பனிப்பிரதேசம் என்பதால் விமானத்தின் நொறுங்கிய பாகங்களையும், இறந்தவர்களின் உடல்களையும் பல ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியவில்லை.
அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேற்ற நிறுவனத்தைச் சேர்ந்த வீரர்கள், விபத்தில் சிக்கிய விமானத்தின் இடிபாடுகளைக் கடந்த 2003ல் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் டோக்ரா ஸ்கவுட், அப்பகுதியில் 2005, 2006, 2013 மற்றும் 2019களில் தேடுதல் பணியில் ஈடுபட்டது. அப்போது வரை, ஐந்து பேரின் உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்திருந்தன.
இந்நிலையில், நம் ராணுவத்தின் டோக்ரா ஸ்கவுட், திரங்கா மலை மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் மீண்டும் இறங்கினர். அப்போது, விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், மூன்று உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒருவர் கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த தாமஸ் செரியன். இளம் வயதில் ராணுவத்தில் சேர்ந்த இவர், 22 வயதில் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மற்ற இருவர், சிப்பாய்சிங் மற்றும் மல்கான் சிங்; இவர்கள் ராணுவத்தின் மருத்துவ படையில் பணியாற்றியவர்கள். மற்றொரு உடல் யாருடையது என, இதுவரை கண்டறியப்படவில்லை.
தன் சகோதரர் உடல், 56 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து கேரளாவைச் சேர்ந்த தாமஸ் செரியனின் சகோதரி கூறுகையில், “எனக்கு, 12 வயதாக இருக்கும் போது என் அண்ணன் விபத்தில் உயிரிழந்தார்.
''இன்று எனக்கு, 68 வயதாகிறது. இப்போது அவரின் உடல் கிடைத்துள்ளது. அண்ணனின் உடல் கிடைத்தது ஒருபுறம் மகிழ்ச்சியாகவும், அவரை இழந்துவிட்டோம் என்று நினைக்கும் போது வருத்தமாகவும் உள்ளது,” என்றார்.