விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு: மத்திய அரசின் உதவியை நாடுகிறது பஞ்சாப்
விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு: மத்திய அரசின் உதவியை நாடுகிறது பஞ்சாப்
ADDED : ஜன 04, 2025 09:36 PM

புதுடில்லி: பஞ்சாபில் விவசாயிகளின் காலவரையற்ற போராட்டத்திற்கு தீர்வு காணும் விவகாரத்தில் தலையிட வேண்டும் என மத்திய அரசிற்கு பஞ்சாப் அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்திற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவ.,26ம் தேதி முதல் விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒருவரான ஜிக்ஜித் சிங் தலேவால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விவகாரத்தில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலையிட வேண்டும் என பஞ்சாப் மாநில அரசு கடிதம் எழுதி உள்ளது. இக்கடிதத்தை பஞ்சாப் மாநில விவசாயத்துறை அமைச்சர் குர்மீத் சிங் எழுதி உள்ளார். இதற்கு மத்திய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை.
விவசாய சங்க தலைவரின் போராட்டம் குறித்து சவுகான் கூறுகையில், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார். மேலும், விவசாய சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பீர்களா என்ற கேள்விக்கு, வாரந்தோறும் செவ்வாய் அன்று விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களை சந்தித்து வருவதாக கூறியுள்ளார்.

