ரயில் நிலையத்துக்கு மடாதிபதி பெயர் முதல்வர் மீது சோமண்ணா குற்றச்சாட்டு
ரயில் நிலையத்துக்கு மடாதிபதி பெயர் முதல்வர் மீது சோமண்ணா குற்றச்சாட்டு
ADDED : மார் 16, 2025 11:07 PM
துமகூரு: ''துமகூரு ரயில் நிலையத்துக்கு, சித்தகங்கா மடத்தின் சிவகுமார சுவாமிகளின் பெயர் சூட்ட, முதல்வர் சித்தராமையாவே, முட்டுக்கட்டையாக இருக்கிறார்,'' என மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சோமண்ணா குற்றம்சாட்டினார்.
துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
துமகூரு ரயில் நிலையத்துக்கு, சித்தகங்கா மடத்தின் சிவகுமார சுவாமிகளின் பெயரை சூட்ட வேண்டும் என, வேண்டுகோள் வந்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து, கர்நாடக அரசுக்கு கடிதமும் எழுதியது.
மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்து ஐந்து மாதங்கள் ஆகியும், முதல்வர் சித்தராமையா பதில் அளிக்கவில்லை.
எண்ணிலடங்கா சிறார்களுக்கு உணவு, இருப்பிடத்துடன், கல்வி அளித்தவர் சிவகுமார சுவாமிகள்.
இவரை கவுரவிக்கும் வகையில், துமகூரு ரயில் நிலையத்துக்கு, இவரது பெயர் வைக்க மத்திய அரசு முன் வந்தது. ஆனால் முதல்வர் சித்தராமையா, இன்னும் ஒப்புதல் அளித்து கையெழுத்திடவில்லை.
ஏற்கனவே முதல்வர் மற்றும் அரசு தலைமை செயலருடன் ஆலோசித்தும் பயன் இல்லை. ஐந்தாறு முறை நானே நேரில் சென்று பேசினேன். ஏனோ தெரியவில்லை, சிவகுமார சுவாமிகளின் பெயர் சூட்ட, சித்தராமையாவே முட்டுக்கட்டையாக இருக்கிறார். இதற்கான பின் விளைவுகளை அவர் சந்திக்க வேண்டி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.