மாதுசாமியின் கனவை கலைத்த சோமண்ணா சொந்த கட்சிக்காரரே வில்லனாக வந்ததால் தலைவலி
மாதுசாமியின் கனவை கலைத்த சோமண்ணா சொந்த கட்சிக்காரரே வில்லனாக வந்ததால் தலைவலி
ADDED : மார் 18, 2024 06:02 AM
தன் எதிர்ப்பை மீறி, துமகூரு தொகுதியில் பா.ஜ., சீட் பெற்ற, முன்னாள் அமைச்சர் சோமண்ணாவை தோற்கடிக்க, அதே கட்சியின் மாதுசாமி சபதம் செய்துள்ளார்.
கர்நாடக பா.ஜ.,வுக்கு தலைவலியை ஏற்படுத்தும் தொகுதிகளில், துமகூரும் ஒன்றாகும். இங்கு இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு இடையே, ஏற்பட்ட கோஷ்டி மோதல், கட்சிக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
காத்திருப்பு
துமகூரு லோக்சபா தொகுதியில், தனக்கு சீட் கிடைக்கும் என, மாதுசாமி, காத்திருந்தார். தொண்டர்களும் கூட, உள்ளூரை சேர்ந்தவருக்கு சீட் தர வேண்டும்; வெளி மாவட்டத்தில் இருந்து, அழைத்து வரக்கூடாது என, மாநில தலைமைக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் இதை பொருட்படுத்தாமல், பெங்களூரை சேர்ந்த சோமண்ணாவை, பா.ஜ., மேலிடம் வேட்பாளராக அறிவித்தது.
வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே, தொண்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். சோமண்ணாவை வேட்பாளராக்கிய பின், மாதுசாமியின் ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்; போராட்டமும் நடத்துகின்றனர். மாதுசாமி பகிரங்கமாகவே அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மாதுசாமிக்கு நேரடி அரசியல் எதிராளி ம.ஜ.த., தான். இந்த கட்சியுடன், பா.ஜ., கூட்டணி வைத்துள்ளதை அவரால் சகிக்க முடியவில்லை. துமகூரு ம.ஜ.த.,வுக்கு சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தொகுதி பா.ஜ.,வுக்கு கிடைத்ததும், தானே வேட்பாளர் என, கனவு கண்டார். இதை சோமண்ணா தவிடு பொடியாக்கி விட்டார்.
'சட்டசபை தேர்தலில், கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, கையை சுட்டுக்கொண்டேன். லட்டு போன்றிருந்த பெங்களூரின், கோவிந்த்ராஜ் நகர் தொகுதியை கைவிட்டேன்' என, ஊடகங்கள் முன்னணியில், புலம்பி, புலம்பியே மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து, டில்லிக்கு நடையாய் நடந்து, சோமண்ணா சீட் பெற்றுக்கொண்டார்.
இதற்காக அவரால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ஏனென்றால் இவரை தோற்கடிக்க, காங்கிரசை விட, சொந்த கட்சியான பா.ஜ.,வினரே காத்திருக்கின்றனர். குறிப்பாக இவரை தோற்கடிக்க வேண்டும் என, மாதுசாமி சபதம் செய்துள்ளார். உள்குத்து வேலை செய்யவும் தயாராவதாக, தகவல் வெளியாகி பா.ஜ., மற்றும் சோமண்ணா வயிற்றில் புளியை கரைக்கிறார்.
பின்னடைவு
இரண்டு 'மாஜி' அமைச்சர்களின் மோதலுக்கு, தீ மூட்டி அதில் குளிர் காய காங்கிரஸ் ஆவலாய் காத்திருக்கிறது. இது பா.ஜ.,மேலிடத்துக்கு தலைவலியாக உள்ளது. மாதுசாமியை சரிக்கட்டா விட்டால், பின்னடைவு ஏற்படும் என அஞ்சுகிறது. கடந்த முறை இத்தொகுதியில் ம.ஜ.த.,வின் தேவகவுடா தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -

