வேனில் முன் இருக்கை தர மறுத்த தந்தையை சுட்டுக்கொன்ற மகன் கைது
வேனில் முன் இருக்கை தர மறுத்த தந்தையை சுட்டுக்கொன்ற மகன் கைது
ADDED : ஜூன் 28, 2025 08:26 PM
புதுடில்லி:வேனில் முன் இருக்கையை தர மறுத்த தந்தையை சுட்டுக் கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு, துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரா சிங், 60. சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றி, ஆறு மாதங்களுக்கு ஓய்வு பெற்றவர். வடக்கு டில்லி திமர்பூர் எம்.எஸ்.பிளாக்கில் குடும்பத்துடன் வசித்தார்.
பணி ஓய்வு பெற்றதால், சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.
கடந்த 26ம் தேதி வீட்டை காலி செய்து வேனில் பொருட்களை ஏற்றினர். புறப்படத் தயாரான போது, வேனின் முன் இருக்கையில் சுரேந்திர சிங் அமர்ந்தார்.
அவரது மகன் தீபக், 26, முன் இருக்கையில் தான் உட்காரப் போவதாக கூறினார். ஆனால், சுரேந்திர சிங் மறுத்து, வேனில் பின்னால் பொருட்களுடன் அமர்ந்து வருமாறு கூறினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடும் ஆத்திரம் அடைந்த தீபக், தந்தையின் துப்பாக்கியை எடுத்து தந்தையையே சுட்டார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த ரோந்துப் பணியில் இருந்த வீரர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேந்திர சிங், அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இடது கன்னத்தில் குண்டு துளைத்ததால், அவரது முகம் சிதைந்திருந்தது.
இதுகுறித்து, திமர்பூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தீபக்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.