ADDED : மார் 04, 2024 07:02 AM

தார்வாட்: சொத்தை பிரித்து தராததால் ஆத்திரத்தில், தாயை கொன்ற மகன், போலீசுக்கு பயந்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தார்வாட் டவுன் ஹோசல்லாபூர் லே - அவுட்டில் வசித்தவர் சாரதா பஜந்த்ரி, 62. இவரது மகன் ராஜேஷ், 40. இவருக்கு திருமணம் ஆகவில்லை. அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாரதாவுக்கு, மாதம் 19,000 ரூபாய் பென்ஷன் வந்தது.
அந்த பணத்தில் தாயும், மகனும் வசித்தனர். சாரதா பெயரில் உள்ள சொத்து, அவருக்கு வரும் பென்ஷன் பணம் முழுவதையும், ராஜேஷ் வாங்க நினைத்தார். இதற்கு சாரதா ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் நேற்று முன்தினம் இரவு தாய், மகன் இடையில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் சாரதாவை, ராஜேஷ் தாக்கினார். படுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார். இதன் பின்னர் ராஜேஷும் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும், வீட்டின் கதவு திறக்கப்படாதால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது, சாரதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததும், ராஜேஷ் துாக்கில் தொங்கியதும் தெரிய வந்தது.
விசாரணையில் தாயை கொன்ற ராஜேஷ், போலீசுக்கு பயந்து தற்கொலை செய்தது தெரிந்தது.

