கடன் சுமையால் ஒன்றாக உயிரிழக்க முடிவு; தாய் இறந்ததாக நினைத்து மகன் தற்கொலை
கடன் சுமையால் ஒன்றாக உயிரிழக்க முடிவு; தாய் இறந்ததாக நினைத்து மகன் தற்கொலை
ADDED : மார் 24, 2025 02:32 AM
திருவனந்தபுரம் : கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள எலமடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், 35, தன் தாய் சுஜாதா, 58, உடன் வசித்து வந்தார். சுஜாதா நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார்.
மேலும், அதிகளவில் கடன் சுமையும் இருந்ததால், இனிமேலும் வாழ வேண்டாம் என கருதி, இருவரும் ஒன்றாக உயிரை விட தீர்மானித்தனர்.
அதற்காக நேற்று முன்தினம் இரவு இருவருமே துாக்க மாத்திரைகளை சாப்பிட்டனர். அதன்பின், தாய் சுஜாதாவின் கழுத்தை சால்வையால் ரஞ்சித் இறுக்கினார். இதைஅடுத்து, மூச்சுத் திணறி சுஜாதா இறந்து விட்டதாக ரஞ்சித் முடிவு செய்து, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், சுஜாதா மயக்க நிலையில் இருந்துள்ளார். நெருங்கிய உறவினர் யாரும் இல்லாததால் இந்த தகவல் உடனடியாக வெளியே தெரியவில்லை.மின் கட்டண பாக்கியை வசூலிப்பதற்காக கேரள மின்வாரிய ஊழியர்கள், ரஞ்சித் வீட்டுக்கு வந்தபோது, தண்ணீர் கேட்டு சுஜாதா அழுது கொண்டிருந்த குரல் கேட்டது.
சுதாரித்த மின்வாரிய ஊழியர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியோடு சுஜாதாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ரஞ்சித் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.