சொத்து, பென்ஷனுக்காக 80 வயது தாயை 11 மாதம் வீட்டில் சிறை வைத்த மகன்
சொத்து, பென்ஷனுக்காக 80 வயது தாயை 11 மாதம் வீட்டில் சிறை வைத்த மகன்
ADDED : பிப் 18, 2024 01:14 AM

துமகூரு, கர்நாடகாவின் துமகூரு டவுன் சிரா கேட் சதேபுராவைச் சேர்ந்தவர் பங்கஜாக் ஷி, 80; அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
பங்கஜாக் ஷிக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என நான்கு பிள்ளைகள்; அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.
மூத்த மகனான சுரேஷ், மருமகள் ஆஷா மற்றும் பேரக் குழந்தைகளுடன் பங்கஜாக் ஷி வசித்தார்.
கடந்த 11 மாதங்களாக பங்கஜாக் ஷியை, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் பார்க்கவில்லை. இது குறித்து கேட்டபோது, மற்ற பிள்ளைகள் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்று சுரேஷும், ஆஷாவும் கூறி வந்தனர்.
இந்நிலையில், சுரேஷுன் வீட்டின் வளாகத்தில் உள்ள சிறிய அறையில் பங்கஜாக் ஷி சிறை வைக்கப்பட்டிருப்பது பற்றி, உறவினர்களுக்கு தெரிய வந்தது.
இது குறித்து, மூத்த குடிமக்கள் உதவி மையம் சார்பில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
நேற்று காலை மாவட்ட சட்டப் பணிகள் சேவை ஆணைய நீதிபதி நுாருன்னிசா, மூத்த குடிமக்கள் உதவி மைய அதிகாரிகள், சுரேஷ் வீட்டிற்கு சென்றனர். பங்கஜாக் ஷி சிறை வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று பார்த்தனர்.
அவர் இருந்த அறை அசுத்தமாக இருந்தது. கிழிந்த உடையுடன் கட்டிலில் பரிதாபமாக பங்கஜாக் ஷி படுத்திருந்தார். அவரை அதிகாரிகள் மீட்டனர்.
“என் பெயரில் உள்ள 12 வீடுகள், மாத பென்ஷன் 50,000 ரூபாய் மற்றும் சொத்துகளை அபகரிக்க, 11 மாதங்களாக மகனும், மருமகளும் சேர்ந்து என்னை சிறை வைத்துள்ளனர்,” என, அதிகாரிகளிடம் பங்கஜாக் ஷி கூறினார்.
ஆனால், உடல்நிலை சரியில்லாததால், அவரை தனி அறையில் வைத்து கவனித்ததாக மகன் கூறினார். அதிகாரிகள் நம்பவில்லை. சுரேஷையும், ஆஷாவையும் கடுமையாக எச்சரித்தனர்.
'இனி இதுபோன்று செய்தால், உங்கள் இருவரையும் கைது செய்வோம்' என, போலீசார் எச்சரித்தனர். பங்கஜாக் ஷிக்கு தைரியம் கூறி போலீசார் புறப்பட்டுச் சென்றனர்.