கர்நாடகாவில் பிரபல தாதா மகன் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கர்நாடகாவில் பிரபல தாதா மகன் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ADDED : ஏப் 19, 2025 11:12 AM

பெங்களூரு: கர்நாடகாவில் மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பா ராய் மகன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கர்நாடகாவில் நிழல் உலக தாதாவாக இருந்தவர் முத்தப்பா ராய். மறைந்துவிட்ட இவர் ஜெய கர்நாடகா என்ற அமைப்பையும் உருவாக்கியவர்.
இவரின் மகன் ரிக்கி ராய். பிடதியில் உள்ள தமது பண்ணை வீட்டில் இருந்து பெங்களூருக்கு காரில் பயணமானார். அவருடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் ஒருவரும் இருந்துள்ளார்.
பண்ணை வீட்டில் இருந்து காரில் வெளியே வந்த சிறிது தூரத்தில் சுற்றுச்சுவர் பின்னால் மறைந்திருந்த சிலர், ரிக்கி ராய் கார் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பின் சீட்டில் அமர்ந்திருந்த ரிக்கி ராய் மீது குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்கட்ட விசாரணையில், அவர் 2 நாட்கள் முன்புதான் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்துள்ளார் என்பதும், தாக்குதல் நடத்தியவர்கள் அவரின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து, தடயவியல் அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் வகையில், சிறப்பு போலீஸ் குழுவும் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.