தந்தையின் உடலை இரண்டாக பிரித்து எரியூட்ட மகன் முரண்டு; தம்பியுடன் ஏற்பட்ட மோதலால் பிடிவாதம்
தந்தையின் உடலை இரண்டாக பிரித்து எரியூட்ட மகன் முரண்டு; தம்பியுடன் ஏற்பட்ட மோதலால் பிடிவாதம்
ADDED : பிப் 04, 2025 12:40 AM
திகம்கர் :  மத்திய பிரதேசத்தின் திகம்கர் மாவட்டம் லிதோரடால் கிராமத்தைச் சேர்ந்த, தயானி சிங் கோஷ், 84, உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
தன் இளைய மகன் தேஷ்ராஜ் வீட்டில் அவர் தங்கியிருந்தார். அவரது இறுதி சடங்குக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது, வெளியூரில் வசிக்கும் தயானி சிங் கோஷின் மூத்த மகன் கிஷண் அங்கு வந்தார்.
தந்தையின் விருப்பப்படி அவரது உடலுக்கு எரியூட்டப் போவதாக இளைய மகன் தேஷ்ராஜ் கூறினார். ஆனால் அதை கிஷண் ஏற்கவில்லை. 'நான்தான் மூத்த மகன்; நான்தான் எரியூட்டுவேன்' என்று கிஷண் கூறினார்.
இதைத் தொடர்ந்து, அண்ணன் - தம்பிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 'அப்படியானால், உடலை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம்' என்று கிஷண் கூறியது, அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதற்கிடையே அங்கு வந்த போலீசார், கிஷணை சமாதானப்படுத்தினர். தந்தையின் விருப்பத்தின்படி, இளைய மகன் தேஷ்ராஜ் உடலுக்கு எரியூட்டினார். மூத்த மகன் கிஷண் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

