sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சோனியா - சோரஸ் விவகாரம் நாட்டின் பாதுகாப்புக்கு... தீவிர பிரச்னை! ஆளுங்கட்சி ரகளையால் பார்லிமென்ட் முடக்கம்

/

சோனியா - சோரஸ் விவகாரம் நாட்டின் பாதுகாப்புக்கு... தீவிர பிரச்னை! ஆளுங்கட்சி ரகளையால் பார்லிமென்ட் முடக்கம்

சோனியா - சோரஸ் விவகாரம் நாட்டின் பாதுகாப்புக்கு... தீவிர பிரச்னை! ஆளுங்கட்சி ரகளையால் பார்லிமென்ட் முடக்கம்

சோனியா - சோரஸ் விவகாரம் நாட்டின் பாதுகாப்புக்கு... தீவிர பிரச்னை! ஆளுங்கட்சி ரகளையால் பார்லிமென்ட் முடக்கம்


ADDED : டிச 10, 2024 02:24 AM

Google News

ADDED : டிச 10, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அதானி லஞ்ச விவகாரத்தை விவாதிக்க வேண்டும்' என்று கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த இரண்டு வாரங்களாக அமளியில் ஈடுபட்டதால், பார்லிமென்டின் இரண்டு சபைகளும் முடங்கின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா தொடர்புடைய அமைப்புக்கு, இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் வழங்கும் நிதியுதவி குறித்து விவாதிக்க வேண்டும் என, ஆளும் தரப்பு நேற்று அமளியில் ஈடுபட்டது. இதனால், இரு சபைகளும் முடங்கின.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. முதல் நாளில் இருந்தே, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மோசடி வழக்கு தொடர்பான பிரச்னையை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன.

இது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், இரு சபைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில்தான், அதானி விவகாரத்தை, எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக எழுப்பும் நடவடிக்கைக்கு, செக் வைக்கும் விதமாக, பா.ஜ., புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது.

ஆசியா -  பசிபிக் ஜனநாயகத் தலைவர்கள் என்ற அமைப்பில், நான்கு இணைத் தலைவர்கள் உள்ளனர். இதில், ராஜிவ் காந்தி பவுண்டேஷன் தலைவராக உள்ள சோனியாவும் ஒருவர்.

ஒத்திவைப்பு


இந்த அமைப்புக்கு, அமெரிக்காவின் கோடீஸ்வர தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நடத்தி வரும் அறக்கட்டளை நிதி உதவி அளித்து, ஆதரவும் காட்டி வருகிறது. இந்த ஜார்ஜ் சோரஸ், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்.

குறிப்பாக, காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலும், காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிலும் உள்ளவர்.

'சோனியா அங்கம் வகிக்கும் ஓர் அமைப்புக்கு, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அமைப்பு ஆதரவு அளித்து வருகிறது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைப்பதற்காக வெளிநாட்டு சக்திகள் வாயிலாக வரும் நிதி குறித்த பின்னணியை விவாதிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை, பா.ஜ., - எம்.பி.,க்கள், கையில் எடுத்துள்ளனர்.

கடந்த வாரமே, இந்த பிரச்னையை பா.ஜ., கிளப்பியிருந்த நிலையில், நேற்று காலை லோக்சபா கூடிய மறு வினாடியே, ஜார்ஜ் சோரஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று பா.ஜ.,வின் எம்.பி.,க்கள் அமளி செய்தனர். ஆளும் கட்சியே அமளியில் இறங்கியதும், ஒரே நிமிடத்தில் சபை ஒத்திவைக்கப்பட்டது.

பகல் 12:00 மணிக்கு, மதியம் 2:00 மற்றும் 3:00 மணிக்கு சபை கூடி ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக நாள் முழுதும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபா காலையில் கூடியதும்,சோனியாவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு, சபைத் தலைவர் ஜக்தீப் தன்கர், வாழ்த்து செய்தி வாசித்துவிட்டு, ''விதி எண் 267ன் கீழ் 11 நோட்டீசுகள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை பொருத்தமில்லாதவை என்பதால் நிராகரிக்கிறேன்,'' என்றார்.

அவற்றில் ஜார்ஜ் சோரஸ் விவகாரம் குறித்து பா.ஜ., - எம்.பி.,க்கள் அளித்திருந்த நோட்டீஸ்களும் அடக்கம்.

கடும் கோபம்


அதே நேரத்தில், இதே விவகாரம் குறித்து, ஜீரோ நேரத்தில் பா.ஜ., - எம்.பி.,க்கு பேச வாய்ப்பு தரப்படவே, அதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கடும் வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசுவதற்கு, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பலமுறை முயற்சித்தார்.

அந்த நேரத்தில், சபை முன்னவரும் சுகாதாரத் துறை அமைச்சருமான நட்டா, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவே, மல்லிகார்ஜுன கார்கே கடும் கோபமடைந்தார்.

''நீங்கள் நியாயமாக நடக்கவில்லை. என்னை காத்திருக்க வைக்கிறீர்கள். சபை அலுவல்களை நடத்த விடாமல் இந்த அரசு, ஜனநாயகத்தை கொன்று கொண்டிருக்கிறது,'' என, சபைத் தலைவரை நோக்கி அவர் ஆவேசமாக பேசினார்.

இதையடுத்து, கூச்சல் குழப்பம் அதிகரிக்கவே சபை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், 12:00 மணி, 2:00 மணிக்கு கூடியபோதும், சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் 3:00 மணிக்கு கூடியபோது அமளி ஏற்பட்டது.

அப்போது பேசிய சபைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ''நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்குள் சவால் விடும் வகையில் வெளிநாட்டு சக்திகள் செயல்படுகின்றன.

''நம் நாட்டின் வளர்ச்சியை பொறுக்காத இந்த சக்திகள், நம் நாட்டின் பொருளாதாரம், அரசியல் என அனைத்தையும் சீர்குலைக்கப் பார்க்கின்றன.

''இதற்கு நாம் இடம் தரக்கூடாது. அரசியலமைப்பு சட்டத்தின்படி கூடியிருக்கும் இங்குள்ள நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது,'' என கூறிவிட்டு, சபையை ஒத்திவைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், ''சோனியாவின் அறக்கட்டளைக்கு சோரஸ் நிதியுதவி கிடைத்துள்ளது சாதாரணமான விவகாரம் இல்லை. இது, நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய தீவிரப் பிரச்னை. இதில் கட்சியை பார்க்கக் கூடாது. கட்சி பேதமில்லாமல் அனைவரும் ஒன்றுபட்டு, இதை சந்திக்க வேண்டும்,'' என்றார்.

''நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம். தேசபக்தி குறித்து எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை,'' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி கூறியுள்ளார்.

பேட்டி எடுத்த ராகுல்!

பார்லிமென்ட் முடக்கப்பட்ட நிலையில் வெளியே வந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள், நுழைவுவாயில் அருகே கோஷம் எழுப்பினர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானி முகமூடி அணிந்திருந்த இரண்டு காங்., - எம்.பி.,க்களிடம், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேட்டி எடுப்பது போல் நடித்தார். மோடி மற்றும் அதானியை கிண்டல் செய்யும் வகையில், அந்தப் பேட்டி அமைந்திருந்தது.



நம்பிக்கையில்லா தீர்மானம்!

ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டி, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு, எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.



- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us