ADDED : ஜூன் 16, 2025 06:04 AM

புதுடில்லி: காங்., - பார்லி., குழு தலைவர் சோனியா, 78, உடல்நலக் குறைவு காரணமாக டில்லியில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவுக்கு சமீபத்தில் சென்ற சோனியா, உயர் ரத்த அழுத்தம் காரணமாக, அங்குள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதையடுத்து டில்லி வந்த அவர், சர் கங்கா ராம் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார்.
இந்நிலையில், டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா நேற்று மீண்டும் அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக, மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.