சுயசரிதையை எழுதி முடித்தார் சோனியா; விரைவில் வெளியீடு
சுயசரிதையை எழுதி முடித்தார் சோனியா; விரைவில் வெளியீடு
ADDED : நவ 17, 2024 04:38 AM

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, தன் சுயசரிதை புத்தகத்தை எழுதி வருவதாக சில ஆண்டுகளாகவே பேச்சு அடிபட்டது.
முக்கிய சாட்சி
உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக, தீவிர அரசியல் செயல்பாடு களில் இருந்து ஒதுங்கி, ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் சோனியாவின் வயது, 78. இவர், கடந்த 1968ல் ராஜிவை திருமணம் செய்து, நேரு குடும்பத்து மருமகளானார்.
அப்போது முதல், தேசிய அரசியலில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் சாட்சியாக, இவர் இருந்திருக்க வேண்டும். இவரது குடும்பத்திலேயே நடைபெற்ற இரண்டு படுகொலைகள். ராஜிவ் படுகொலையை அடுத்து கட்சிக்குள் நிகழ்ந்த பிரச்னைகள் ஆகியவற்றுக்கு சோனியா தான் நேரடி சாட்சி.
கடந்த 1996க்கு பின், மத்தியில் கூட்டணி அரசுகள் அமைந்து அவை கவிழ்ந்தன, இவற்றின் பின்னணி சம்பவங்கள் எல்லாம் சோனியாவை சுற்றியே நிகழ்ந்தன.
எதிர்பார்ப்பு
பல ஆண்டுகளுக்கு பின் 2004ல், காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடித்தது.
அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தார். அப்போது, சோனியா பிரதமராக முயற்சி செய்தும், முடியாமல் போனது
இந்த சம்பவங்கள் குறித்து பல தலைவர்கள், சில விஷயங்களை வெளிப்படுத்தியிருந்தாலும், சோனியா அதுகுறித்து இதுவரை எதுவுமே கூறியதில்லை. இந்த நிலையில் தான் சோனியாவின் சுயசரிதை புத்தகம் தயாராகியுள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஹார்பர் காலிந்ஸ் என்ற பதிப்பகத்துடன், சட்ட ரீதியான ஒப்பந்தத்தில் சோனியா கையெழுத்திட்டுள்ளார்.
இந்தியாவில் புகழ்பெற்ற பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் என்ற பதிப்பகம் தான், சோனியாவின் சுயசரிதை புத்தகத்தை வெளியிடுகிறது.
கடந்த 50 ஆண்டுகால இந்திய அரசியலில், நேரு குடும்பத்தை மையமாக வைத்து நிகழ்ந்த பல்வேறு முக்கிய திருப்பங்களையும், வரலாற்று சம்பவங்களையும் உள்ளடக்கியதாக இந்த புத்தகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -

