ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு சோனியாவுக்கு கண்டனம்
ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு சோனியாவுக்கு கண்டனம்
ADDED : பிப் 01, 2025 01:59 AM

நேற்று, பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடிந்ததும் வெளியில் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவிடம், ஜனாதிபதி உரை குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு அவர், “ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் படித்ததால், பாவம் உரையின் இறுதியில் ஜனாதி பதி சோர்வாக காணப்பட்டார்,” என்றார். சோனியா அருகில் இருந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதை குறிக்கும் வகையில், 'நோ கமென்ட்ஸ்' என கூறினார்.
இந்நிலையில், சோனியாவின் இந்த கருத்துக்கு ஜனாதிபதி மாளிகை, பிரதமர் மற்றும் பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜனாதிபதி உரை நிகழ்த்தியபோது எந்த இடத்திலும் சோர்வடையவில்லை. உண்மையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்காக உரையாற்றுவது சோர்வை உண்டாக்காது.
இத்தகைய கருத்துக்கள் மோசமானவை; முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை. நாட்டின் உயர் பதவியின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சோனியா மற்றும் ராகுலின் கருத்து குறித்து டில்லி துவாரகாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் குடும்பத்தாரின் ஆணவம் இன்று முழுமையாக வெளிப்பட்டுள்ளது. ஜனாதிபதி பார்லிமென்டில் உரை நிகழ்த்தினார்.
''மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், அந்த உரையை சலிப்பூட்டியது என்கிறார்; இன்னொருவர் ஜனாதிபதி சோர்வடைந்துவிட்டதாக கூறியுள்ளார். அவர்களுக்கு நகர்ப்புற நக்சல் என்ற வார்த்தை உரையில் இருந்திருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும்,” என்றார்.
இதே போல் பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான நட்டாவும் சோனியாவை கண்டித்தார். அவர் கூறுகையில், “ஜனாதிபதியை நோக்கி 'பாவம் அவர்' என்ற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்தியது, காங்கிரசின் மேட்டுக்குடி மற்றும் ஏழைகள், பழங்குடியினருக்கு எதிரான மனப்பான்மையை காட்டுகிறது. இதற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார்.