சோனியாவின் உடல் நிலையில் முன்னேற்றம்; மருத்துவமனை தகவல்
சோனியாவின் உடல் நிலையில் முன்னேற்றம்; மருத்துவமனை தகவல்
ADDED : மார் 27, 2026 07:22 PM

புதுடில்லி: டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் பார்லிமெண்ட் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நலக் குறைவு காரணமாக டில்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 24ம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உடல் முழுவதும் பரவியுள்ள ஒருவகை தொற்று பாதிப்புக்காக ஆன்டிபயாடிக் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மூத்த மருத்துவர்கள் ராணா, நந்தி, அரூப் பாசு ஆகியோர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அளிக்கப்படும் மருந்து மற்றும் சிகிச்சை முறைகளுக்கு அவரது உடல்நிலை முழுமையாக ஒத்துழைக்கிறது.
உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இன்னும் ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
