குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் இருமுறை சோனியாவின் பெயர்; சர்ச்சையை கிளப்பியது பாஜ
குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் இருமுறை சோனியாவின் பெயர்; சர்ச்சையை கிளப்பியது பாஜ
ADDED : ஆக 13, 2025 04:56 PM

புதுடில்லி: இந்திய குடிமகள் ஆவதற்கு முன்பே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது எப்படி என்று பாஜ கேள்வி எழுப்பியுள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் அடங்கிய இண்டி கூட்டணி குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், பாஜ தற்போது சோனியாவின் ஓட்டுரிமை குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜ எம்பியுமான அனுராக் தாகூர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; இத்தாலியில் பிறந்த சோனியாவின் பெயர் 1980ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார், எனக் கூறியிருந்தார்.
அவரது இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து, பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா, தனது எக்ஸ் தளப்பக்கத்தில் 1980ம் ஆண்டு புதுடில்லி தொகுதியின் வாக்காளர் பட்டியலின் நகலை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர் விடுத்துள்ள பதிவில்; 1980ம் ஆண்டு முதல்முறையாக சோனியாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார். அந்த சமயம் சப்தர்ஜூங் சாலையில் உள்ள பிரதமர் இந்திராவின் வீட்டில் வசித்து வந்தனர். இந்திரா, ராஜிவ், சஞ்சய் மற்றும் மேனகா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 1980ம் ஆண்டு டில்லி பார்லிமென்ட் தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, வாக்குச்சாவடி 145ல் வரிசை எண் 388ல் சோனியாவின் பெயர் சேர்க்கப்பட்டது.
இது முழுக்க முழுக்க தேர்தல் சட்ட விதிமீறலாகும். இந்திய குடிமகன்களால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதியுண்டு. அதன்பிறகு 1982ல் அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டு, 1983ம் ஆண்டு ஜனவரி மாதம் சோனியா பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. அவர் 1983ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி மட்டுமே இந்திய குடியுரிமை பெற்றார். அதாவது, குடியுரிமை இல்லாத நிலையில், 4 மாதங்களுக்கு முன்பே மீண்டும் வாக்காளர் பட்டியலில் 2வது முறையாக பெயர் சேர்க்கப்பட்டது.
ராஜீவை திருமணம் செய்த பிறகு, இந்திய குடியுரிமையை ஏற்க சோனியா காந்திக்கு 15 ஆண்டுகள் ஏன் ஆகியது?. இது அப்பட்டமான தேர்தல் முறைகேடு இல்லையென்றால், வேறு என்ன?, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.