கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் சோரன்
கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் சோரன்
ADDED : ஏப் 01, 2024 09:08 PM

புதுடில்லி : சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் திரும்ப பெற்றார்.
ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக, அங்கு முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீது புகார் எழுந்தது.
இது குறித்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையினர், அவரை கடந்த ஜனவரி 31ல் கைது செய்தனர். ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வராக அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சம்பாய் சோரன் பதவியேற்றதை அடுத்து, மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. கடந்த பிப்., 23 - மார்ச் 2 வரை நடந்த அந்த கூட்டத்தொடரில் பங்கேற்க, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் அனுமதி கோரினார். அவரது மனு பிப்., 28ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், விஸ்வநாதன் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததால், அந்த மனுவை திரும்பப் பெற ஹேமந்த் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அனுமதி கோரினார். அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்ததை அடுத்து, மனு திரும்பப் பெறப்பட்டது.

