இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது தென்ஆப்ரிக்கா!
இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது தென்ஆப்ரிக்கா!
ADDED : நவ 26, 2025 01:03 PM

கவுகாத்தி: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்க அணி இமாலய வெற்றி பெற்றது. இதன்மூலம், 25 ஆண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணில் தொடரை வென்றுள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 489, இந்தியா 201 ரன் எடுத்தன. 288 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், இந்தியாவுக்கு 549 ரன் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது. ஸ்டப்ஸ் 94 ரன் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட் கைப்பற்றினார்.
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க பேட்டர்கள் ஏமாற்றினர். ஜெய்ஸ்வால் (13), ராகுல் (6) ஆட்டமிழந்தனர். 4வது நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன் எடுத்திருந்தது.
இந்த நிலையில், கடைசி நாளான இன்று ஒருநாள் தாக்குபிடித்தால், போட்டியை டிரா செய்து, தொடரையும் சமன் செய்து விடலாம் என்ற சூழலில், இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியது. ஆனால், முதல் இன்னிங்சை போலவே இந்திய பேட்டர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர்.
ஜடேஜா மட்டும் தாக்கு பிடித்து (54) அரைசதம் அடித்தார். எஞ்சிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இந்திய அணி 140 ரன்னுக்கு சுருண்டது. இதன்மூலம், 408 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் ஹார்மர் 6 விக்கெட்டையும், மகாராஜ் 2 விக்கெட்டையும், மார்கோ, முத்துச்சாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
2-0 என்ற கணக்கில் தொடரை வென்ற தென்ஆப்ரிக்க அணி, 25 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் தொடரை வென்றுள்ளது.

