ADDED : ஏப் 16, 2025 04:12 AM

புதுடில்லி : 'தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயல்பை விட குறைவான மழைப்பொழிவு இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலம் நாட்டின், 42.3 சதவீத மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 18.2 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழைப் பொழிவு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
தென்மேற்கு பருவமழைப் பொழிவு சராசரியாக, 87 சதவீதமாக இருந்து வரும் நிலையில், இந்தாண்டுக்கான மழைப்பொழிவு நாடு முழுதும் இயல்பை விட அதிகமாக இருக்கும். அது, 105 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், பீஹார், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர், லடாக்கின் சில பகுதிகளில் இயல்பை விட குறைந்த மழைப்பொழிவே இருக்கும்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, ஒடிஷா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்தில் இயல்பானது முதல் வழக்கத்துக்கு அதிகமான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.